ADMK MLAs today against met DMK working President Stalin
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் நடத்தப்பட்ட குதிரை பேர சர்ச்சை, குட்கா ஊழல் குற்றச்சாட்டு என எடப்பாடி அரசின் தலைக்கு மேல் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற பேச்சு பரவலா முனுமுனுக்கப்பட்டு வரும் நிலையில், தங்களது பங்காக அரசை அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்.
குதிரைபேர விவகாரத்திற்கு முன்பு வரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை அவ்வப்போது நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் விமர்சித்து வந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் வீடியோ வெளியானதற்கு பின்பு கைகட்டி வாய்மூடி மவுனி ஆகிவிட்டனர். சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்த கருணாஸ் திடீரென நடுநிலை வகிக்கத் தொடங்கியிருக்கிறார்.
மாட்டிறைச்சி விவகாரம் காரணமா?
அண்மையில் மாட்டிறைச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் திமுகவினர் போர்க்கொடி உயர்த்தினர். கேரள, மணிப்பூரைப் போல தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்றும்,மாட்டிறைச்சி தடை மீதான விவகாரத்தில் முதல் அமைச்சர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
திமுக வெளிநடப்பு செய்த பிறகு சில நிமிடங்களிலேயே கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் வெளிவந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மாட்டிறைச்சி மீதான தடை விவகாரத்தில் முதல் அமைச்சர் எடப்பாடியின் பதிலில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் தெளிவான முடிவினை அவர் அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
ஏன் இந்த திடீர் மனமாற்றம்
அதிமு எம்.எல்.ஏ.க்களை விட செல்வாக்குமிகுந்தவர்களாகவே கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் வலம் வந்தனர். இவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது. கட்சிக்காக நாயாக உழைத்த நமக்கு அரசு எதையும் உடனடியாக செய்வதில்லை. நம்மால் ஜெயித்த இவர்களுக்கு இத்தனை பவுசா என்ற அதிமுக உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் முனுமுனுக்கத் தொடங்கினர். இம்மூவர் அணியின் எந்திர தந்திர அரசியல் எல்லாம் குதிரை பேர விவகாரத்திற்கு முன்பு வரை மட்டுமே செல்லுபடியானது.
தொலைக்காட்சிகளில் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் விவகாரத்தை வீதிக்கு கொண்டு வர அரசு, இம்மூவர் அணியை கைகழுவத் தொடங்கியதாகக் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். ஒரு கட்டத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனி நீங்க உங்க வழியில் போங்க என்று கூறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மூம்மூர்த்திகளும், திமுக வை நோக்கி தங்களது கவனத்தை திசை திருப்பினர் என்கின்றனர் உடனிருந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்தே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் சட்டசபை வளாகத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளார். ஊர் கூடி தேர் இழுத்த கதையாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் என்னும் தேரை இழுக்க தயாராக, தமிமுன் அன்சாரி மட்டும் புது ரூட்டு பிடித்து எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக சந்திப்பு
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸும், தனியரசும் மூன்றாவது முறையாக சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலை குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தனர்.
முரசொலி பவள விழா அழைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை மூவர் அணி சந்தித்துப் பேசுவதே இதுவரை தலைப்புச் செய்திகள் ஆன நிலையில், தற்போது இம்மூவரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முரசொலி பத்திரகையின் 75 ஆம் ஆண்டு பவள விழா ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படவுள்ளது. இதில் பங்கேற்குமாறு அழைக்கவே கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திமுகவை நம்பும் கருணாஸ் அணி
குதிரை பேர விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதில் இருந்து திமுக தங்களைக் காக்கும் என்று மூவர் அணி உறுதியாக நம்புகிறதாம். அவர்களுக்கு தேவையானதை நாம் செய்தால், நம்மை திமுக காக்கும் என்ற நம்பிக்கையிலேயே செயல்தலைவர் மு.கஸ்.டாலினை கருணாஸ் அடிக்கடி சந்திப்பதற்கான காரணம் என்கிறார் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நி்ர்வாகி
