admk mlas meeting arranged on jan 3rd on party office

தமிழக சட்ட சபைக்கு புதிதாக நுழையவுள்ள டிடிவி தினகரனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதித்து, ஸ்லீப்பர்செல்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் வரும் ஜன.3ம் தேதி நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அவ்வாறு, 2018ஆம் ஆண்டுக்கான கூட்டத் தொடர் வரும் ஜனவரி 8ஆம் தேதி துவங்குகிறது. சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்குகிறது சட்ட மன்றக் கூட்டத் தொடர்.

தற்போது, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாகப் பதவி ஏற்று, சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளார். இதனால் எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரனை எப்படி சமாளிப்பது என்பதில் அதிமுக.,வினர் மிகவும் உன்னிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள். 

இந்நிலையில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி புதன்கிழமை அன்று, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.