2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக அப்பாவு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக இன்பதுரை போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளும், அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக அப்போது குற்றம் சாட்டிய அப்பாவு இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். அதில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக நான் போட்டியிட்டு, கடந்த 19-5-2016 அன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது.


18 சுற்றுகள் நியாயமாக நடைபெற்றது. ஆனால், 19, 20, 21-வது சுற்றுகளும், தபால் ஓட்டுகளும் தவறாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

அதில் 19-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற 3,192 வாக்குகளுக்கு பதிலாக 3,242 வாக்குகள் என்றும், 20-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற 3,526 வாக்குகளுக்கு பதிலாக 3,659 வாக்குகள் என்றும், 21-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற 1,992 வாக்குகளுக்கு பதிலாக 2,157 வாக்குகள் என்றும் தவறாக அறிவித்துவிட்டு, அதன்பிறகு தபால் ஓட்டுகளில் எனக்குரிய வாக்குகள் செல்லாது எனவும் அறிவித்துவிட்டனர்.

இவ்வாறு ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் முருகானந்தமும், அவரோடு இருந்த தேர்தல் பார்வையாளரும் சட்டத்திற்கு புறம்பாக 599 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற என்னை வெற்றி பெற்றவர் என்று அறிவிக்காமல் தோற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் என்று அறிவித்துள்ளார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த 29 தகர டிரங் பெட்டிகளில் பூட்டும் இல்லை. சீல் வைக்கவும் இல்லை. அத்தாட்சி அட்டையும் இல்லை. மேலும், அனைத்து பெட்டிகளும் திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் 29 கண்ட்ரோல் யூனிட்டுகளிலும் இணைக்கப்பட்டிருந்த சீட்டுகள் இல்லை. 79 கண்ட்ரோல் யூனிட் இருந்த 8 தகர டிரங் பெட்டிகள் சீல் இல்லாமலும், 2 கண்ட்ரோல் யூனிட் வெளியே தனியாகவும் இருந்துள்ளது.

இந்த சம்பவங்களை பார்த்தால் ராதாபுரம் தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. எனவே மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார் அப்பாவு. அம்மனுவில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், அப்பாவு கோரிக்கையை ஏற்று தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து உடனடியாக தற்போதைய ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த உத்தரவுக்கு எதிராக தான் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரினார். இன்பதுரையின் இந்த அவசர முறையீட்டையடுத்து வரும் 3 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

எனவே ராதாபுரம் தொகுதியில் தபால்வாக்குகள் மறு எண்ணிக்கை நடக்குமா, எம்.எல்.ஏ. மாறுவாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.