admk mla saravanan speak ops and eps called Idaya theivam

தமிழக சட்டப் பேரவையில் இன்று பேசிய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாண்புமிகு இதய தெய்வம் முதலமைச்சர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் துணை முதலமைச்சர் அவர்ளே என கூறி அங்கிருந்த அதிமுக எம்எல்ஏக்களை மட்டுமல்ல அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தார்.

அதிமுகவைப் பொறுத்தவரை புரட்சித் தலைவர் என்றால் எம்ஜிஆர், புரட்சித் தலைவி மற்றும் இதய தெய்வம் என்றால் அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையே குறிக்கும். அந்த அளவுக்கு தொண்டர்கள் மத்தியில் இந்த வார்த்தைகள் ஊறிப்போயுள்ளது.

ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரையும் இதய தெய்வம் என யாரும் அழைத்ததில்லை. அவர் உயிருடன் இருந்தவரை இப்படி ஒரு வார்த்தையை யாரும் உதிர்த்ததில்லை.

தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் தற்போதுள்ள அதிமுக எம்எல்ஏக்கள், தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் என்னென்னவோ பேசி வருகிறார்கள். அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை புகழத் தொடங்கிவிட்டனர்.

இதனை இன்று மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் இன்று பேசிய சரவணன், மாண்புமிகு இதய தெய்வம் முதலமைச்சர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் துணை முதலமைச்சர் அவர்களே என்று கூறி மற்ற எம்எல்ஏக்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டுமே இதுவரை இதய தெய்வம் என்று அதிமுகவினர் அழைத்து வந்த நிலையில் தற்போது இபிஎஸ்,ஓபிஎஸ் ஆகியோரையும் இதய தெய்வம் என அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளது தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

நல்ல வேளை இபிஎஸ்யும், ஓபிஎஸ்யும் புரட்சித் தலைவர்களே என்று அழைக்காமல் விட்டார்களே என தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து கொள்ள வேண்டியது தான் என குரல்கள் எழுகின்றன.

இதே போன்று அதிமுக எம்எல்ஏ அர்ச்சுனன் பேசும்போது, ஸ்டெர்லைட்டை மூடிய தங்கம் முதலமைச்சர் அவர்களே, வெள்ளையத் தேவன் துணை முதலமைச்சர் அவர்களே என பேசி தனி மனித துதி பாடினார். போகிற போக்கில் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் எம்ஜிஆர். ஜெயலலிதாவை மிஞ்சி விடுவார்களோ என தொண்டர்கள் பதறுகிறார்கள்.,