கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான பிரபு, 19 வயதான தனது காதலி சௌந்தர்யாவை கரம்பிடித்தார். 38 வயதான பிரபு, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு-வுக்கும் காதலி சௌந்தர்யாவுக்கும் நேற்று திடீர் திருமணம் நடைபெற்றது. தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.,வின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. 
ஆனால், திருமணத்துக்கு முன்பு பெண்ணின் தந்தை சுவாமிநாதன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார். தன் பெண்ணை மீட்டு தர வேண்டும் என்றும் தன் பெண்ணை ஆசை வார்த்தை கூறி பிரபு திருமணம் செய்துகொண்டதாகவும் பெண்ணின் தந்தை புகார் கூறியிருந்தார். இருவருக்கும் 20 வயது வித்தியாசத்தைக் குறிப்பிட்டு, தன் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததால், பெண்ணை மீட்க வேண்டும் என்றும் சுவாமிநாதன் கோரியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
இந்நிலையில் இதுகுறித்து எம்.எல்.ஏ. பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் சௌந்தர்யாவை கடத்திகொண்டு வந்து வற்புறுத்தி திருமணம் செய்ததாகச் சொல்கிறார்கள். கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்தி பரப்புகிறார்கள். அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. நாங்கள் இருவரும் காதலித்தோம். சௌந்தர்யா வீட்டில் நான் பெண் கேட்டேன். ஆனால், அவர்கள் தர மறுத்துவிட்டார்கள். அதன்பிறகு என்னுடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. சௌந்தர்யாவை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்யவில்லை. காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார். பிரபு இந்த விளக்கம் அளித்தபோது செளந்தர்யாவும் உடன் இருந்தார்.