ADMK MLA Mind voice They re buying! We are only the one who is shy
அடித்து வெளுக்கும் அடைமழையில் ஆடி தத்தளித்துக் கொண்டிருக்கிறது சென்னை. மழைதண்ணீர் வடியல, குடிதண்ணீர் கிடைக்கல, கரண்ட் வரல, பால் பூத் திறக்கல, ரேஷன் கடையில எதுவுமில்ல...என்று மக்கள் அங்கலாய்த்து, ஆதங்கப்பட்டு ஆளும் அ.தி.மு.க. அரசை காய்ச்சிக் கொட்டுகிறார்கள்.
ஆனால் சென்னை மாவட்ட அ.தி.மு.க.வினருக்கோ மக்கள் மீது மண்டைகாய்ச்சல் கடுப்பு இந்த விஷயத்தில். இருக்காதா பின்னே!...
சென்னை மாவட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைதான் அதிகம். கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினில் துவங்கி, முன்னாள் சுறுசுறு மேயர் மா.சுப்பிரமணியம், செயல் புயல் சேகர் பாபு, வாகை சந்திரசேகர் உட்பட பல வைபரண்ட் புள்ளிகள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இதே சென்னையில்தான் இருக்கிறார்கள்.
கொட்டி கவிழ்த்திக் கொண்டிருக்கும் மழையில் இவர்களில் எத்தனை பேர் வீதியில் வந்து நின்று மக்களுக்கு கை கொடுத்தார்கள்? என்று கேள்வி கொக்கிகளை கோக்கு மாக்காக போடுகிறார்கள்.
தொகுதிக்கு அவர்களில் சிலர் வந்து நிற்பது கூட ஏதோ பார்மாலிட்டிக்காகதான் இருக்கிறதே தவிர, உளப்பூர்வமாக! உடல் வருந்த எங்கே வந்து நின்றார்கள்! இரண்டு நாட்களுக்கு முன் ஸ்டாலின் வந்தபோது அவரோடு சிலர் வந்ததோடு சரி.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், ‘மழை வெள்ள நேரத்தில் மக்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் அதற்கு தயாராகுங்கள்.’ என்று சொல்லி ஸ்டாலின், நமக்கு நாமேவை ரத்து செய்தபோது ‘ப்பார்றா!’ என்று அவர் மீது ஒரு மரியாதை வந்தது.

ஆனால் அவர் சார்ஜாவுக்கும், லண்டனுக்கும் பிரத்யேக விசிட் போகத்தான் இந்த முடிவெல்லாம் என்று இப்போது தெரிகிறது. ஸ்டாலின் இருக்கும் போது தொகுதிக்கு விசிட் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் எத்தனை பேர் இப்போது தொகுதிக்குள் வருகிறார்ள் காட்டச் சொல்லுங்கள்.
ஆக ஓட்டு வாங்கி எம்.எல்.ஏ.வாகி அதிகார தோரணையில் சுற்றுவதும், சம்பளம் இத்யாதிகளை வாங்கிக் கொண்டாடுவது அவர்கள், ஆனால் திட்டு வாங்கிக் கட்டுவது மட்டும் எங்கள் ஆட்சியா? என்று குமுறுகின்றனர்.
ஆனால் இதற்கு பதிலளிக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோ “அபாண்டமான குற்றச்சாட்டு இது. தளபதியும், நாங்களும் விடாத மழையிலும் தொகுதிக்குள் வந்து நல உதவிகள் செய்திருக்கிறோம். அரசின் கைகளை எதிர்பார்த்து ஏமாந்து நின்ற மக்களின் கரங்களில் எங்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட உணவு உள்ளிட்டவையே நிரம்பி வழிகின்றன.

தளபதி ஸ்டாலினின் வெளிநாட்டு விசிட்டானது திடீரென முடிவானது. தவிர்க்க முடியாத பயணம். அவர் விமானம் ஏறுவது சில மணிநேரங்களுக்கு முன்பு வரை தொகுதிக்குள் நின்று மக்களுக்கு உதவினார். கிளம்புகையில் எங்களிடம் நான் இங்கில்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள் என்று சொல்லியே சென்றிருக்கிறார்.
தொகுதிக்குள் நாங்கள் பணியாற்றுவதை ஒவ்வொரு மணி நேரமும் தனது வாட்ஸ் ஆப் வழியே தனக்கு அப்டேட் செய்ய சொல்லியிருக்கிறார். ஆக நாங்கள் மக்களோடு மழை களத்தில்தான் இருக்கிறோம்.

தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டதாலேயே எங்களுடைய தொகுதிகளை வேண்டுமென்றே ஆளும் அரசு புறக்கணிக்கிறது, மக்களை பழிவாங்குகிறது. ஆனால் நாங்கள் மக்களுக்காக நின்று போராடுகிறோம், உரிமைகளை பெற்று தர முயற்சிக்கிறோம்.” என்கின்றனர்.
அடைமழை விட்டாலும் இவர்களின் மோதல் அரசியல் நிற்காது போல!
