அதிமுகவில்சோதனை ஏற்பட்டுள்ள இந்த சூழலில் தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம் என எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

சசிகலா அணியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரனுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

இதையடுத்து தினகரன் கட்சியில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டது தினகரன் தரப்பினரை உற்சாகமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் தோழமை கட்சி எம்எல்ஏக்களான, தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர், டி.டி.வி.தினகரனுக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் அதிமுகவில் தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைளை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்

தமிழர் உரிமைகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாக்கவும் அதிமுக ஒன்றுபட்டு வலிமை பெற வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பொதுக் கூட்டம் வெற்றி பெற மனமார வாழ்த்துவதாகவும் அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.