admk mla demands edappadi palanisamy to allot district wise ministers

ஒரு அமைச்சரவையில் யார், யாரை அமைச்சர்களாக நியமிப்பது, யார் யாரை நீக்குவது? என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் முதல்வராக அமரும் வரை, அந்த உரிமைக்கு சிக்கல் இல்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், கட்சியையோ, ஆட்சியையோ கட்டுப்படுத்தவோ, வழிகாட்டவோ சரியான தலைமை இல்லாமல், இருக்கும் நிலையில், ஆளாளுக்கு அமைச்சர் பதவி கேட்டு முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பது சாதாரண நிகழ்வாகி விட்டது. நேற்று முன்தினம், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ க்கள் முதல்வரை சந்தித்து பேசினர். நேற்றும் 10 எம்.எல்.ஏ க்கள் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.

தொகுதி பிரச்சினை குறித்து முதல்வரிடம் பேசினோம் என்று, அவரை சந்திக்கும் அனைத்து எம்.எல்.ஏ க்களும் ஒரே குரலில் பதிலை உதிர்த்தாலும், உண்மை அதுவல்ல.

கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகள் செயல்படுத்த படுவதில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. அடுத்து, அமைச்சர் பதவிக்கான நச்சரிப்பு ஆகியவையே சந்திப்பில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்று கூறப்படுகிறது.

தற்போதைய அமைச்சரவையில், முக்குலத்தோர் மற்றும் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே அதிக அமைச்சர் பதவிகளும், முக்கிய இலாக்காக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற சமூகங்களுக்கு, அந்த அளவுக்கு வழங்கப்படவில்லை.

ஜெயலலிதா இருந்த வரை, அது குறித்து பேச முடியாத நிலையில் இருந்த எம்.எல்.ஏ க்கள், தற்போது முதல்வர் எடப்பாடியை சந்தித்து அதை வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, தலித், நாடார் போன்ற சமூகங்களுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் வேண்டும். அதேபோல், மாவட்ட வாரியாக, அந்தந்த சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

சமூக நீதியின் அடிப்படையில், மாவட்ட வாரியாக அனைத்து சமூகங்களுக்கும், அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சர் பதவியும், கட்சி பதவியும் கொடுத்திருந்தால், தற்போதைக்கு இப்படி ஒரு நெருக்கடி வந்திருக்காது என்பது உண்மை.

சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு அமைச்சர் பதவிகளை அள்ளி கொடுப்பதும், சில சமூகங்களுக்கு அதை புறக்கணிப்பதும் எல்லா காலத்திற்கும் பொருத்தமாக அமையாது என்பது இதன்மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்கின்றனர் அதிமுகவினர்.

ஆளுமை நிறைந்த, தொண்டர்கள் செல்வாக்கு பெற்ற கட்சி தலைமை இல்லாத தற்போதைய நிலையில், யாரையும் திருப்தி படுத்த முடியாமல் தவிக்கும் எடப்பாடி, தம்முடைய முதல்வர் பதவியை எப்படி தக்க வைத்து கொள்ள போகிறார்? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.