தமிழகத்தில் அமமுக என்ற கட்சி இருப்பதாகவே தெரியவில்லை என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட மூன்று அரசுப் பள்ளிகளில் மாணவர் பயன்பாட்டுக்காக சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு  குடிநீர் நிலையங்களை தகவல் தொழில் நுட்பத்  துறை அமைச்சர் மணிகண்டன் தொடங்கிவைத்தார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது அமமுக தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.மட்டுமே பெரிய கட்சிகள். தமிழகத்தில் அ.ம.மு.க. என்ற கட்சி இருப்பதாகவே தெரியவில்லை. தேர்தல் முடிந்த பின்பு அனைத்து கட்சிகளும் காணாமல் போய்விடும்." எனத் தெரிவித்தார்.


அமைச்சரின் இந்தக் கருத்து வெளியானவுடனே அவருக்கு எதிராக அமமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கொந்தளித்துவருகிறார்கள்.