ADMK Ministers are compromise Divakaran
தினகரன் கைது செய்யப்படும் வரை நொந்து நூலாகி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த திவாகரன், தற்போது, கம்பீரமாக எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார்.
தினகரன் இல்லாத நிலையில், கட்சியும், ஆட்சியும் இனி நமது கட்டுப்பாட்டில்தான் வரும் என்று உறுதியாக நம்புகிறார்.
அதனால், அமைச்சர்கள் சிலரை அவ்வப்போது தமது வீட்டுக்கு வரவழைத்து, தினகரனை ஒதுக்கிவிட்டு, கட்சியை எப்படி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் டி.டி.வி பேரவை என்ற பெயரில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதேபோல், தினகரனின் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷை, தலைமை ஏற்க வா! என்று அழைப்பு விடுத்தும் தஞ்சையிலும். சென்னையிலும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதை கண்டு கடும் ஆத்திரம் அடைந்த திவாகரன், சில அமைச்சர்களை அவசரமாக அழைத்து, போஸ்டர் ஓட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடுமாறு வற்புறுத்தி உள்ளார்.
ஆனால், இப்போது இருக்கும் நிலையில், அவர்கள் மீது நாம் நடவடிக்கை எடுத்தல், அது சிக்கலாகிவிடும். எனவே, கொஞ்சம் விட்டு பிடிப்போம். அதுவரை கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று, அமைச்சர்கள் திவாகரனை சாந்தப்படுத்தி உள்ளனர்.
தினகரனை விட சசிகலாவுக்கு திவாகரனே செல்ல பிள்ளை என்றாலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுத்து செயல்படுவார் என்பதன் காரணமாகவே, திவாகரனுக்கு கட்சியில் எந்த பொறுப்பையும் அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
