நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர், தொட்டிவலசு ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு புதிய ரேஷன்கடைகளை திறந்து வைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர், அத்தனூருக்கு உட்பட்ட பகுதியில் நடந்து வரும் அரசு திட்ட பணிகளை பார்வையிட அவர் சென்றார். அப்போது அங்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் திரண்டு சென்று அமைச்சரை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது,” தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வருவதில்லை. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தண்ணீர் வழங்கப்படுகிறது, இதனால் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம் என புகார் கூறினர்.
அதற்கு, மின்நிறுத்தம் காரணமாக குடிநீர் தடைபட்டிருக்கலாம் என அமைச்சர் சரோஜா கூறினார். ஆனால், பொதுமக்கள், மறுப்பு தெரிவித்து, இப்பகுதிக்கு வரும் குடிநீர் பைப்லைன் அடிக்கடி உடைந்துவிடுகிறது. இதுபற்றி பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனை முறையாக பராமரித்துஇருந்தால், இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதுதொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுக்கும்படி கூறிய அமைச்சர், குடிநீர் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். அமைச்சரை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால், அங்கு சுமார் 2 மணிநேரம் பரபரப்பு நிலவியது.