தங்கப் பல் கட்டிக் கொண்டதால் ஒருவர் உதிர்ப்பதெல்லாம் பொன்மொழி ஆகிவிடாது என்பது போல, பிறப்புச் சான்றிதழை வைத்துக்கொண்டு ஒருவர் தந்தையின் பதவியைப் பிடித்துக் கொண்டதால் அவருக்குத் தலைமை தகுதி வந்துவிடாது என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வெளியிட்டு வரும் முதிர்ச்சியற்ற அறிக்கைகளே சாட்சி. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வரைப் பற்றி தரக்குறைவான முறையில் விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்த மனிதர் என்பதை ஊருக்கு விளக்குவதாக இருக்கிறது.
பிறப்புச் சான்றிதழை வைத்துக்கொண்டு ஒருவர் தந்தையின் பதவியைப் பிடித்துக் கொண்டதால் அவருக்குத் தலைமை தகுதி வந்துவிடாது என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வெளியிட்டு வரும் முதிர்ச்சியற்ற அறிக்கைகளே சாட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

பல்வேறு விவகாரங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துவருகிறார். மு.க. ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தங்கப் பல் கட்டிக் கொண்டதால் ஒருவர் உதிர்ப்பதெல்லாம் பொன்மொழி ஆகிவிடாது என்பது போல, பிறப்புச் சான்றிதழை வைத்துக்கொண்டு ஒருவர் தந்தையின் பதவியைப் பிடித்துக் கொண்டதால் அவருக்குத் தலைமை தகுதி வந்துவிடாது என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வெளியிட்டு வரும் முதிர்ச்சியற்ற அறிக்கைகளே சாட்சி.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வரைப் பற்றி தரக்குறைவான முறையில் விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்த மனிதர் என்பதை ஊருக்கு விளக்குவதாக இருக்கிறது. பணிவாக, பண்பாட்டுடன் தலைக்கனம் இன்றி எளிமையாக நடந்துகொள்ளும் தமிழக முதல்வரைப் பற்றி தரமற்ற வார்த்தைகளில் விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின், தான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்.


2006, அக்டோபர் மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுகவினர் செய்த ஜனநாயக விரோத, அராஜகச் செயல்களை, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நீதியரசர் எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கடுமையாக கண்டித்ததையும் அதன் விளைவாக 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டதையும் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டு அறிக்கை விடுகிறார். அந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதத்தையும், அப்போது நடைபெற்ற திமுகவின் வன்முறை வெறியாட்டத்தையும் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற அனைத்து பெரிய மாநகராட்சிகளிலேயே மேயர்கள் மறைமுகத் தேர்தல் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து மேயர் தேர்ந்தெடுக்கப்படும் முறை நிர்வாக வசதிக்காகவும், மேயரும், கவுன்சிலர்களும் முரண்பாடு இன்றி செயல்பட உதவும் என்பதாலும் மறைமுகத் தேர்தல் முறையை அரசு கொண்டு வருவதில் என்ன ஜனநாயகச் சீர்குலைவு இருக்கிறது என்கிறார் மு.க.ஸ்டாலின். முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் எல்லாம் மறைமுகத் தேர்தல் வழியாகத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நாள்தோறும் நிகழ்த்தப்பட்டு வரும் சாதனைகளை மக்கள் பாராட்டும் விதமாகத்தான் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றியை அதிமுகவுக்கு அளித்துள்ளனர்.
திமுக நடத்திய அராஜக ஆட்சியைப் போல் அல்லாமல் மக்கள் போற்றும் எளிய, இனிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியிருக்கிறது. ஏரி, குளம், அணைக்கட்டுகள் தூர்வாரப்பட்டு நீர் மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எல்லோரும் மத்தியிலும், மாநிலத்திலும் பதவிகளில் அமர்ந்துகொண்டு மக்களை ஆட்டிப் படைத்த ஆட்சி முறை இன்று இல்லை. மாறாக இப்பொழுதுதான் உண்மையான மக்களாட்சி நடைபெறுகிறது.
தொழில் வளர்ச்சி, புதிய முதலீடுகள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ வசதிகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது, வேளாண்மை உற்பத்தியில் புதிய உச்சம், என்று அரசின் துறைதோறும் புதுப்புது சாதனைகளைப் படைப்பது அவற்றுக்கு தேசிய அளவில் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. திமுக அடகு வைத்த காவேரியை, முடக்கிப் போட்ட முல்லை பெரியாற்று உரிமையை, பறிகொடுத்த ஜல்லிக்கட்டு பெருமையை, கடந்த காலங்களில் திமுக பறிகொடுத்த தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாய் மீட்டு வருவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சிதான் என்பதை மு.க. ஸ்டாலின் மறந்துவிட்டாரா? மறைக்க முயல்கிறாரா?’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
