தங்களுடைய கூட்டணி கட்சி தலைவரையே கடுமையாக விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.
அந்த அமைச்சர் வேறு யாருமல்ல; வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிலோபர் கபில். கண்டனத்துக்கு ஆளான கூட்டணி கட்சித் தலைவர் பாஜகவைச் சேர்ந்த தேசிய செயலாளர் எச். ராஜா. அதுவும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்த பிறகு எச். ராஜாவை தமிழக அமைச்சர் நிலோபர் கபில் விமர்சிக்கும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார் என்றுதானே நினைக்கிறீர்கள். வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதிகள் எச். ராஜா பேசியதுதான் காராணம் என்கிறார் அமைச்சர். 
திருப்பத்தூரில் ஜெயலலிதான் 71-வது பிறந்த நாள் விழாவில் பேசும்போது எச். ராஜாவை கடுமையாக வறுத்தெடுத்தார் நிலோபர் கபில். அவர் பேசிய பேச்சு இதுதான்:


“வாட்ஸ்அப் பதிவில் வந்த ஒரு வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாதான் பேசியிருந்தார். அந்த வீடியோவில் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதிகள் என எச். ராஜா பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சை பார்க்கும்போது, அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் யோசிக்காமல் பேசி இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இதைப் பார்க்கும்போது சிரிப்பாக  இருக்கிறது.   சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடியில் ஒரு விபத்தில் இந்து சகோதரருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையினரை எதிர்த்து போராடிய  இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகள் என்று எச்.ராஜா கூறியதற்குக்  கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
 நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளரை தமிழக அமைச்சர் கண்டித்து பேசியது வேலூர் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.