தமிழக அரசியலில் முதலமைச்சருக்கு இருக்கும் பிரச்சனையை வைத்து துணை முதல்வர் பதவி , புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி , பொருளாளர் மு.க.ஸ்டாலின் , சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்ட சில தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்களி சட்னியா என தொண்டர்கள் ஆவேசத்துடன் கேட்கின்றனர்.


தமிழக முதல்வர் தனது இமேஜை வலுவாக பராமரிக்க கூடியவர். என்ன ஆனாலும் கதி கலங்காத அவருடைய தைரியம் தொண்டர்களுக்கு அவரை பின்பற்ற முக்கிய காரணமாக அமைந்தது. எம்ஜிஆருக்கு பின்னால் அதிமுக அழியும் என தப்புக்கணக்கு போட்டவர்கள் மத்தியில் அதிமுகவை தூக்கி நிறுத்தி எம்ஜிஆர் படைக்காத பல சாதனைகளை படைத்தவர் ஜெயலலிதா.

திடீரென உடல் நலம் குன்றிய ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் தமிழக அரசியல் சூழலே மாறிவிட்டது. அவருடைய உடல் நலத்தை சுற்றியே குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அப்போலோவை சுற்றியே ஒட்டுமொத்த தமிழக அரசியலும் , தமிழக ஆட்சி நிர்வாகமும் மாறிப்போனது.
மறுபுறம் முதல்வர் உடல் நிலை குறித்து முதன் முதலில் அவர் உடல் நலம் பெற வேண்டும் , மாற்றுகொள்கை இருந்தாலும் அவர் உடல் நலம் பெற்று நலமடையவே விரும்புகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். மு.க.ஸ்டாலினும் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். நலம் பெற வாழ்த்து தெரிவிக்கும் அதே வேலையில் முதல்வர் உடல் நிலை பற்றி பல்வேறு பத்திரிக்கைகளில் வந்துள்ள நிகழ்வுகளை கோடிட்டு காட்டி முதல்வர் படத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வைத்தார்.

கவர்னர் பிரச்சனையை கையிலெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மறுபுறம் ஸ்டாலினும் கவர்னர் தலையிட வேண்டும் என்று அறிக்கை விட்டார். முக்கியமான பிரச்சனை முதல்வர் பொறுப்பில் இருக்கும் முக்கியமான தலைவர் உடல் நலமில்லாமல் இருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களை சந்தித்து வெளியே கிளம்பும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடக்க வேண்டும்.
ஆனால் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து பேசுவது , அறிக்கை விடுவது நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி கொள்வது வலுவான எதிர்க்கட்சிக்கு சரியான அணுகுமுறையா என்ற கேள்வி வைக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ஆட்சி நிர்வாகம் எந்த வித தடங்கலுமின்றி நடப்பதை யாரும் மறுக்க முடியாது. டெல்லியில் காவிரி பிரச்சனை ஆனாலும் , தமிழகத்தின் பிரச்சனை ஆனாலும் தானாக எல்லாம் நடக்கிறது. ஆனால் முக்கிய எதிர்கட்சியான திமுக திட்டமிட்டு இதில் காய் நகர்த்துவதாக கூறுகின்றனர்.
இது பற்றி பேசிய அதிமுக பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
இதே சூழ்நிலையில் திமுக ஆட்சி இருந்த காலக்கட்டம் . 2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி முதுகு தண்டில் ஆபரேசன் செய்யப்பட்டு போரூர் ராமச்சந்திராவில் அனுமதிக்கபட்டிருந்தார். அப்போது இலங்கை பிரச்சனை கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். தமிழகம் முழுதும் போராட்டங்கள் வெடித்து கிளம்பிய நேரம்.

இலங்கை பிரச்சனையில் சென்னையில் பல போராட்டங்கள் நடந்தது இதில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்ததும் அதை ஒட்டி பிரச்சனைகள் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலையில் இறங்கி நடத்திய மறியல் போராட்டங்களால் சென்னையே ஸ்தம்பித்தது.
இவை எல்லாவற்றையும் தாண்டி வரலாற்றில் முதல் முறையாக போலீசார் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைந்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் , நீதிபதி ஒருவரே தாக்கப்பட்டதும் நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் யாரும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. இத்தனைக்கும் 40 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவரின் மகள் கனிமொழி 2 ஜி விவகாரத்தில் நெருக்கடி தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் என்ன காரணத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதுபற்றி அறிக்கை கேட்டோ, புகைப்படம் வெளியிட வேண்டும் என்றோ யாரும் அரசியல் செய்யவில்லை.

மறுபுறம் ஸ்டாலின் உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றாலும் அவர் எதிர்கட்சித்தலைவர் அவர் உடல் நிலை என்ன என்னதான் அவருக்கு பிரச்சனை மருத்துவ அறிக்கை வேண்டும் என்று கேட்கவில்லை. இது போன்று அவர்கள் குடும்பத்தில் அவர்களும் பொது வாழ்வில் இருக்கிறார்கள் எனபதற்காக யாரும் அரசியல் செய்ய வில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் இந்த கோரிக்கையை வைப்பதும் அதை பாஜகவில் உள்ள மத்திய அமைச்சர்களே நிராகரித்து பேட்டியளிப்பதும் தினசரி செய்தியாகி வரும் நேரத்தில் தமிழகத்தின் பொறுப்புள்ள கட்சியாக இருக்க வேண்டிய திமுகவும் அதன் தலைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வரின் படத்தை வெளியிட வேண்டும் என கோருவது எப்படி சரியாக இருக்கும்.
இதற்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் கூறுவதே பொருத்தமாக இருக்கும் முதலமைச்சர் மருத்துவமனையில் இருக்கும் படத்தை வெளியிடுவது அவசியமில்லாத ஒன்று. முதலில் அவர் மருத்துவமனையில் இருக்கிறார், இரண்டாவது அவர் ஒரு பெண் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததே முக்கிய எதிர்க்கட்சியான திமுகவுக்கு கூறும் பதிலாக இருக்க முடியும்.
தமிழகத்தில் எந்த வித அசாதாரண சூழலும் இல்லாத போதிலும் நாகரீகமான அரசியல் நடத்துவதாக கூறி முதலமைச்சரை அப்போல்லோவில் சென்று பார்ப்பதும், நலமடைய விரும்புவதாக கூறுவதும் மறுநாளே புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதும் எந்த வகையில் சரியாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா" என்ற கேள்வியை தொண்டர்கள் எழுப்புகின்றனர்.
