அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கட்சி நிர்வாகிக்கு வேலை பறிபோனது.

முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் சசிகலா தலைமைப் பொறுப்பேற்பதற்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரனியில் நடைபெற்ற ஜெ.பேரவை கூட்டத்தில், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது ஆரனி நகர கூட்டுறவு வங்கியில் பகல் நேர வாட்சுமேனாக வேலை பார்த்து வரும் 9வது வார்டு அதிமுக பிரதிநிதி கந்தன் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்,இதனால் ஆத்திரம் அடைந்த சசிகலா ஆதரவாளர்கள் கந்தனை சரமாரியாக அடித்து உதைத்து வெளியே அனுப்பினர்,

அத்துடன் விடவில்லை அவர்கள்….அடுத்த நாள் காலை கந்தன் வேலைக்குச் சென்றபோது, வங்கி மேலாளர், கந்தனை வேலைக்கு வர வேண்டாம் என கூறி வெளியே அனுப்பிவிட்டார்.

மிகுந்த சோகத்துடன் வங்கியிலிருந்து வெளியேறிய கந்தன் அடுத்து தனது கட்சி பதவிக்கும் ஆபத்து ஏற்படலாம் என நொந்துபோயுள்ளார். ஆனாலும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.