கடந்த ஒரு மாதகாலமாக வாட்ஸ் அப், பேஸ்புக் , வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட தலைவர் என்றால் அது சசிகலாவாகத்தான் இருக்கும். தங்கள் தலைவியை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜிடம் அதிமுக ஐடி விங் தலைவர் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா இருந்த வரையில் நெட்டிசன்கள் பார்வை திமுக , காங்கிரஸ் , வைகோ , விஜயகாந்த் என்றிருந்தது. காரணம், சாதாரணமாக ஊத்திக்கொடுத்த உத்தமி என்று பாடியதற்காக உலகில் உள்ள சட்டங்களை எல்லாம் தேடிப்பிடித்து மக்கள் அதிகாரம் கோவன் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தனர்.
ஜெயலலிதா மருத்துவமனியில் அனுமதிக்கப்படும் வரை அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா பற்றி ஃபேஸ்புக்கில் பதிவு செய்த 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா பொதுச்செயலாளர் ஆனார். ஓபிஎஸ் முதல்வர் ஆனார். அதன் பின்னர் நெட்டிசன்களின் டார்கெட்டே சசிகலாவும் பன்னீரும் என்றாகி போனார்கள்.
கூடவே பொதுமக்கள் ஆதரவும் சேர்ந்துகொள்ள ஓபிஎஸ்சை மிக்சர் முதலமைச்சர் என்று சொல்லும் அளவுக்கும் , சசிகலா பதவி ஏற்ற அன்று நாளை நமதே பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசியதையும் கிண்டல் அடித்து நெட்டிசன்கள் போட்ட பதிவுகள் மற்ற கிரகங்களுக்கு கூட ஒரு ரவுண்டு போய் வந்துவிட்டது என்று கூறலாம்.
யாராவது எதிர்த்தால் அப்போலோவுக்கு போகப்போகிறாயா என்று அப்போலோவையும் விட்டு வைக்கவில்லை. பின்னர் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதும் அவரை விட்டு விட்ட நெட்டிசன்கள் பார்வை முழுதுமாக சசிகலா பக்கம் திரும்பியது.
இனி வி.கே.சசிகலா என்றால் அதற்கு ஒரு பதிவு , நான் சிங்கம் என்றால் அதற்கு ஒரு பதிவு , பன்னீர் செல்வத்தை எதிர்த்து கோபமாக இரவு கொடுத்த பேட்டையை வைத்து சமையல் செய்வது எப்படி என்பது முதல் பல வகைகளில் பதிவு.
சிறைக்கு செல்லும் அன்று ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை அடித்து சபதம் செய்ததை வைத்து வறட்டி தட்டுவது , மல்யுத்த போட்டியில் ரெஃப்ரி , கிரிக்கெட்டில் ஸ்லிப் , பச்சைகுதிரை தாண்டுவது , ராக்கெட்டை செலுத்த பட்டனை அமுக்குவது என புகுந்து விளையாடி விட்டனர்.
கார்ட்டூனின் மறு வடிவமான மீம்ஸ்கள் சிரிக்க வைத்தாலும் பலர் அவதூறாகவும், கேவலமாக சித்தரித்தும் பதிவிட்டிருந்தனர். கட்சியின் பொறுப்பில் இருப்பபவர் என்பதை மறந்து அவதூறாக பதிவு செய்வது சட்டப்படி குற்றம்.
இதை அடுத்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராஜ் சத்தியன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை ஃபேஸ் புக், வாட்ஸ் அப் , யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாகவும் ஆதாரமற்ற வகையிலும் குற்றம் சாட்டி பதிவிட்டு வருகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இதற்காக 173 வகையான ஆதாரங்களையும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். அதன் மீது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் கேட்டுள்ளார். இந்த புகார் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
