சேகர் ரெட்டியிடம் இருந்து மூத்த பத்திரிகையாளர்கள் லஞ்சம் பெற்றதாக வெளியிடப்பட்ட பட்டியல் தவறானது எனவும் அதற்காக அதிமுக ஐடி பிரிவு செயலாளர் பிரசாத் மன்னிப்பு கோரியுள்ளார்.

சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அந்த டைரியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்களின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.

இந்நிலையில், சேகர் ரெட்டியின் டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக ஆங்கில வார இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றும் தொடர்ச்சியாக அச்செய்தியை ஒளிபரப்பியது.

இதையடுத்து, சேகர் ரெட்டியின் டைரியில் அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், தனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது எனவும் தனது வீட்டிலிருந்து எந்த டைரியும் கைப்பற்றப்படவில்லை எனவும் சேகர் ரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேகர் ரெட்டியிடமிருந்து சில மூத்த பத்திரிகையாளர்கள் லஞ்சம் பெற்றதாக ஒரு பட்டியல் வெளியானது. அந்த பட்டியலை வெளியிட்டது அதிமுக ஐடி பிரிவு என்பது உறுதியானது. பத்திரிகையாளர்கள் குறித்து தவறான தகவல் வெளியிடப்பட்டதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

தவறாக வெளியிடப்பட்ட பட்டியலை உடனடியாக நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ள அதிமுக ஐடி பிரிவு செயலாளர் பிரசாத், அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.