ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விடாமல் துரத்தி வரும் திமுகவுக்கு பதிலடி தரும் வகையில், 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்க ஆளுங்கட்சி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.


தமிழ் நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகளை காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், காவல் துறை அதிகாரிகள் மீதும் திமுக எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினார். இந்நிலையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததாக மு.க. ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


 நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  “தடை செய்யப்பட்ட குட்கா கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை நடக்கிறது. இதை நிரூபிக்க திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை குழு நோட்டீஸ் என்ற அனுப்பி, தகுதி நீக்கம் செய்துவிட்டு, சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளது" என மனுவில்  ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.


இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார். அப்போது அங்கே ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர் , “11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இதை பொறுத்துக் கொள்ளாத அரசு, உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க செய்வதாக’ குற்றம்சாட்டினர். மேலும், ‘இந்த விசாரணையை எதிர்கொள்ள தயார்’ என்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள்.
இதையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 13 அன்று விசாரிப்பதாக  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.