வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வென்றிருந்தாலும்... அவரது தந்தை துரைமுருகனின் சொந்த ஊரில், அதுவும் சொந்த பூத்தில் திமுகவை விட அதிமுகவே அதிக வாக்குகள் அள்ளியுள்ள தகவல் திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியானாலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பூத்திலும் யார் யார் எத்தனை வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் தற்போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு துரைமுருகனை பயங்கரமாக வெறுப்பேத்தி வருகிறார்கள் சில திமுக நிர்வாகிகள்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கீழவைத்தியணன் குப்பம் எனப்படும் கே.வி.குப்பம் தொகுதியில் இருக்கும் காங்குப்பம் கிராமம் தான் துரைமுருகனின் சொந்த ஊர். இந்த ஊரில் காங்குப்பம், பெருமாங்குப்பம், காங்குப்பம் காலனி என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் தான் துரைமுருகன் பிறந்து வளர்ந்தார். கல்யாணம் ஆன புதிதில் அவர் தனது மாமனார் ஊரான காட்பாடியிலேயே செட்டிலாகிவிட்டார். அதேநேரம் துரை சிங்காரம் உள்ளிட்ட துரைமுருகனின் சகோதரர்கள் மற்றும் பங்காளிகள் எல்லாம் இன்னும் காங்குப்பத்தில்தான் இருக்கிறார்கள். துரைமுருகனின் குடும்பத்தினரின் குல தெய்வக் கோயிலும் சொந்த ஊரில் தான் உள்ளது. தேர்தல் வெற்றிக்காக குல தெய்வத்துக்கு பன்றியை வெட்டி பலி கொடுத்து பூஜை நடத்தியதாகவும் கே.வி.குப்பம் தொகுதியில் பேசப்பட்டது. துரைமுருகனுக்கு மிகவும் நெருங்கிய ஆனந்த சித்தரும் இந்த ஊரில் தான் இருக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தலில் துரைமுருகனின் சொந்த ஊரில் கிடைத்த ரிசல்ட் துரைமுருகனை திமுகவினர் மத்தியில் அசிங்கப்பட வைத்துள்ளது. அதாவது காங்குப்பத்தில் 159 ஆவது வாக்குச் சாவடியில் திமுக 433 ஓட்டுகளும், அதிமுக 339 ஓட்டுகளும் பெற்றிருக்கின்றன. இங்கே 94 வாக்குகள் திமுக முன்னிலைக்கு வந்தது. இதே கிராமத்தின் பெருமாங்குப்பம் வாக்குச் சாவடி எண் 158 இல் திமுக 401 வாக்குகள் பெற்றுள்ளது, ஆனால் அதிமுகவோ 505 வாக்குள் பெற்று 104 வாக்குகள் முன்னிலை பெற்றது. காங்குப்பம் காலனி பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் திமுக 328 வாக்குகளும், அதிமுக 318 வாக்குகளும் வாங்கியிருக்கிறது. ஆக துரைமுருகனின் சொந்த ஊரில் திமுகவும், அதிமுகவும் சமபலத்தில் இருக்கின்றன.

இதையடுத்து துரைமுருகன் பெரிதும் அப்செட் ஆகிவிட்டார். காரணம் தனது சொந்த ஊர் திமுக மற்றும் அங்காளி பங்காளிகளுக்கு போன் போட்ட துரைமுருகன், நம்ம ஊர்லயே திமுகவுக்கு இணையா அதிமுக வளந்துருக்கு. என்னயா வேலை பார்த்திருக்கீங்க? நீங்கதான் சொந்தமா? இப்படி கவுக்க பாத்தீங்களே என்று கோப்பட்டு திட்டித் தீர்த்திருக்கிறார். ஆனால் அங்காளி பங்காளிகளோ அண்ணே இந்த ஓட்டு விழுந்ததே நமக்கு பெருசு தான் பம்மி பேசினார்களாம்.