இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்‍கப்படுவதை தடுத்த நிறுத்த நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்‍கள், பிரதமர் திரு. நரேந்திர மோடியை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பாக்‍ நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்‍கப்படுவதை தடுத்து நிறுத்தவும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக இந்திய-இலங்கை மீனவர்களிடையே 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 4-ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இனிமேல் தாக்‍கப்படமாட்டார்கள் என இலங்கை அமைச்சர்கள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்‍குள் மீன்பிடித்துக்‍கொண்டிருந்த 2 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று துப்பாக்‍கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்‍கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்‍கள் கையெழுத்திட்ட கோரிக்‍கை மனு ஒன்றை மக்‍களவை துணை சபாநாயகர் டாக்‍டர் மு.தம்பிதுரை மற்றும் நாடாளுமன்ற கழக எம்.பி.க்‍கள் குழுத் தலைவர் டாக்‍டர் வேணுகோபால் ஆகியோர் பிரதமரை இன்று நேரில் சந்தித்து அளித்தனர். 

அந்த மனுவில் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்‍கிச்சூடு நடத்தியதாகவும், இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் ஏற்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்‍கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இனிமேல் தாக்‍குதல் நடத்தப்படமாட்டாது என இந்திய-இலங்கை மீனவர்களிடையே நடைபெற்ற 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்‍குப் பின்னர் இந்திய-இலங்கை அமைச்சர்கள் மட்டத்திலான சந்திப்பின்போது, இலங்கை அரசு சார்பில் உறுதி அளிக்‍கப்பட்டதையும் மனுவில் சுட்டிக்‍காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்‍கிச்சூடு சம்பவம் மீண்டும் நடந்திருப்பது இருதரப்பினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள், இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்‍க பிரதமர் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்‍கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இப்பிரச்னை குறித்து உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதாக கழக எம்.பி.க்‍களிடம் உறுதி அளித்தார்.