எம்பி பதவி தருவதாக தேமுதிகவுடன் எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார் தேமுதிகவுக்கு அதிமுகவின் சார்பில் ஒரு எம்பி பதவி ஒதுக்குவார்கள் என நம்புவதாக சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில் வைகைச்செல்வன் இவ்வாறு பதிலளித்துள்ளார் .  இதே கருத்தை அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியுள்ளார் .  இது நிச்சயம் தேமுதிகவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்குப் பதில் என்றே கூறலாம்.  பழனியில் அதிமுக சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது .  இதில்  அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்களில் ஒருவருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டார், 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,   நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது ,  ஆனால் இதுவரை அதற்கான எந்த அறிகுறிகளும்  தென்படவில்லை .  அதேபோல் இதுவரை தெளிவான விளக்கத்தையும்  அவரால் கூற முடியவில்லை .  சில சமயங்களில் அவரது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது .  பல சமயங்களில் புறக்கணிக்க வேண்டியவையாகவும், கேலிக்கூத்தானதாகவும் உள்ளது.

 

தேமுதிகவுக்கு அதிமுகவின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என நம்புகிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகைச் செல்வன் ,  பாராளுமன்றத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக தேமுதிகவுடன் எந்தவிதமான உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை .  பாமகவுடன் மட்டுமே உடன்படிக்கை  செய்துகொள்ளப்பட்டது. என்றார். 

ஆனால் தேமுதிக , தமக ஆகிய கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை  இப்போது கேட்கின்றனர் ,  ஆனால் அதிமுகவிலேயே மூத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர் .  ஆகவே இது குறித்த இறுதி முடிவை கட்சியின் தலைமை எடுக்கும் என வைகைச்செல்வன் பதில் அளித்தார், அதிமுக கூட்டணி தர்மத்துடன் நடந்துகொள்ளவேண்டும் ,  தேமுதிக முழுக்க முழுக்க கூட்டணி தர்மத்துடன் நடந்துகொள்கிறது, எனவே தேமுதிகாவுக்கு ஒரு எம்பி சீட் அதிமுக ஒதுக்கும் என நம்புகிறோம் என சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில் அதிமுகவினர் இவ்வாறு கூறுவது தேமுதிகவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் பதிலாகவே கருதப்படுகிறது.