திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் தமிழக அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் பங்கேற்று பேசினார். “எத்தனை நூற்றாண்டு ஆனாலும் சரி, எம்.ஜி.ஆரின் கொள்கைகளும் பெருமைகளும் தொண்டுகளும் மக்கள் மனதை விட்டு மாறாவே மாறாது.
எம்.ஜி.ஆரின் முகத்தை காட்டினாலே, தம்பி உனக்காக ஓட்டு விழும் என்று சொன்னவர் அறிஞர் அண்ணா. அடுத்து நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று திமுகவினர் பேசிவருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. திமுகவில் குடும்ப ஆட்சிதான் தற்போது நடைபெற்றுவருகிறது. குடும்ப ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் ஆட்சியைத் திறமையாக நடத்தி வருகிறார்கள்.” என்று நத்தம் விஸ்வநாதன் பேசினார்.