தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பஞ்சத்தை கட்டுப்படுத்த ஆளும் அதிமுக அரசு எந்த ஒரு துரித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் அதிமுக அரசை கண்டித்து இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 17ஆம் தேதி அன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குடிநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த போது, "தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என அப்பட்டமான பொய் சொல்லி இருந்தார்" என ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதற்கிடையில், தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தண்ணீர் வழங்க இருந்த கேரள அரசின் உதவியையும் நிராகரித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் மேற்கோள் காட்டி இருந்தார், இதனை எல்லாம் கண்டிக்கும் பொருட்டும், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணாத அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உணவகங்கள் மூடப்படுவது, பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது, நிறுவனங்கள் முதல் ஓட்டல்கள் மேன்ஷன்கள் என அனைத்தும் தொடர்ந்து முடங்கி உள்ளது குறித்து திமுக சார்பில் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். அதே வேளையில், ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடக்க, மற்றொரு பக்கம் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் மந்திரங்கள் முழங்க அதிபயங்கர வருண பகவான் யாகம்  நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, கடலூரில் எம் சி சம்பத் தலைமையில் மழை வேண்டி மகா யாகம் நடத்தப்பட்டு  உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் 

அதே போன்று, ஈரோட்டில் பச்சைமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலும் , திருச்சி, ஸ்ரீரங்கம், உறையூரில் நடைபெறும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதியும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையிலும் , கும்பகோணம் கோவிலில் அமைச்சர் துரைக்கண்ணு , சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும் யாகம் நடைபெற்றது.

கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் திருக்கோயிலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலும் யாகம் நடத்தினார்.

ஒரு பக்கம் ஆளும் அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டமும், மற்றொரு பக்கம் மழை வர வேண்டி தீவிர வருண யாகத்தை நடத்தி வருகின்றனர் அதிமுகவினர். தமிழகம் முழுவதும் திமுக நடக்கும் ஆர்ப்பாட்டத்தை திசை திருப்பவே முதல்வர் எடப்பாடி வருண யாகத்தை  நடத்தி வியூகம் செய்து உள்ளார் என விமர்சனங்கள் எழுந்து உள்ளது.