சிகரெட் பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்றால் தொலைக்காட்சி பார்த்தல் மனநலத்திற்கு தீங்கானது என்றாகி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள், குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டாக்குகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், அதையும் மிஞ்சும் அளவுக்கு, 24 மணிநேர செய்தி சேனல்களில் நடக்கும் அரசியல்  விவாதங்கள்  படு மோசமாகவும், அநாகரீகமாகவும்  இருக்கின்றன. 

பலநேரங்களில், விவாதங்களில் பங்கேற்கும் அரசியல்வாதிகளின் உரையாடல்களும், காரசாரமான சண்டைகளும், நாலாம் தர மனிதர்களின் வார்த்தைகளை விட, தரம் தாழ்ந்தவையாக இருக்கின்றன.

தனியார் தொலைக்காட்சியின், ஒரு விவாத நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற, அதிமுகவை சேர்ந்த பேராசிரியர் தீரனும், திமுகவை சேந்த வழக்கறிஞர் சிவ ஜெயராஜும் நடந்துகொண்ட விதம் அருவருப்பின் உச்சம்.

நேரலையில் பேசுகிறோம், பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல், "கனிமொழியும் ராசாவும் உல்லாச பயணம் போனார்களா?" என்றார் தீரன்.

அதற்கு, ஜெயலலிதாவையும்-சோபன்பாபுவையும் இணைத்து பேசி பதில் கொடுத்து அருவருப்பை மேலும் கூட்டினார் ஜெயராஜ்.

அடுத்த நொடியே, இருவரும் பேட்டை ரவுடி பாணியில் அருவருப்பான வார்த்தைகளில், மாறி, மாறி அர்ச்சனை செய்து கொள்ள, அவர்களை சமாளிக்க முடியாமல் திணறினார் நெறியாளர்

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற, பத்திரிகையாளர் மணி, ஓ.பி.எஸ் தரப்பு பாபு முருகவேல் ஆகியோர் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், அந்த அசிங்கத்தை சகிக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டனர்.

அதிமுகவுக்காக தற்போது வரிந்து கட்டி கொண்டு பேசும் தீரன், மார்க்சிய, பெரியாரிய சிந்தனையில் வார்க்கப்பட்டு, பின்னர் பா.ம.க தலைவராகி, முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.

தற்போது அவருக்கு தெரிந்த ஒரே ஒரு தாரக மந்திர வார்த்தை  "மாண்புமிகு சின்னம்மா" என்பதுதான். அந்த அளவுக்கு அவரது அரசியல் பயணம் தடம் மாறிவிட்டது.

திமுக தரப்பில் பேசும் வழக்கறிஞர் சிவ.ஜெயராஜ், வாதங்களை அழகாக எடுத்து வைக்கும் திறமையாளர். அதேசமயம், காது கிழிய சத்தம் போட்டு நாய்ஸ் பொல்யூஷன் ஏற்படுத்தும் தன்மை கொண்டவர்.

மேலும், அடுத்தவர் பேசி முடித்த பின்னர், தமக்கான வாய்ப்பு வரும்போது பேசலாம் என்று இருக்காமல், குறுக்கே பேசி, பேசி பேசுபவரை டென்ஷன் படுத்தும் நபராவார்.

இதுபோன்ற நபர்களை அரங்கத்திற்கு அழைத்து, அவர்களை மோத விட்டு, அதன்மூலம் தங்களது ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள  முயற்சி செய்யும் தொலைக்காட்சிகள் இருக்கும் வரை, இதுபோன்ற அநாகரீகமான விவாதங்கள் அடிக்கடி அரங்கேறும்.

அந்த அருவருப்பான காட்சிகளை யு டியூபில் பதிவேற்றினால், அதிலும் கொஞ்சம் காசு பார்க்கலாம்.

இப்படி காசு, பணம் பார்க்கும் சிந்தனையில், தரம் தாழ்ந்த விவாதங்களுக்கு வாய்ப்பு வழங்கும் ஊடகங்களின் உண்மையான தர்மத்தை பார்த்து, மக்கள்தான் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்.