வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த அதிமுக தலைவர்கள் முதல் முறையாக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருதாக ஒப்புக் கொண்டனர்.

பாஜகவுடன் கூட்டணி என்பதை அதிமுகவில் பலர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சண்முகம், அன்வர் ராஜா எம்.பி. ஆகியோர் இந்த கூட்டணியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட இந்த கூட்டணியை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் பாஜக அதிமுகவை கட்டாயப்படுத்தி இதைச் செய்வதாக அதிமுக வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது.

இந்நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய எட்டு தொகுதிகளில் எங்களுக்கான செல்வாக்கு அதிகம் இருக்கு. அதனால அந்த தொகுதிகளை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என பாஜக கண்டிஷன் போட்டுள்ளது. 

அது மட்டும் அல்லாமல் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமிக்காக தென்காசியும், ஏ.சி,சண்முகத்துக்காக  வேலூர் என இன்னும் பல டிமாண்டுகளை அவர்கள் வைத்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன எடப்பாடி தரப்பு, என்ன செய்தென்று தெரியாமல் கையைப் பிசைந்துள்ளது.

ஆனால் இதற்குப் பிறகு பாஜக வைத்த டிமாண்ட் இருக்கே… பேசப் போனவர்களுக்கே ஹார்ட் அட்டாக் வந்தது போல் ஆகிவிட்டதாம். 
அதாவது நாடாளுமன்ற தேர்தலுடன்  21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதிலும் தங்களுக்கு பங்கு வேண்டும் என கேட்டு பாஜகவினர் அதிமுகவினரை அதிர வைத்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏக்களும் இருக்க வேண்டும் என்று  அக்கட்சியின் மேலிடம் விரும்புகிறது. அதனால் தங்களுக்கு செல்வாக்குள்ள நிலக்கோட்டை, சாத்தூர், திருப்போரூர் ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்கித் தர வேண்டும் என  கூட்டணி பேச வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தொகுதிகள் கேட்டது கூட அதிமுகவை பாதிக்கவில்லை. ஆனால் சட்டமன்றத் தொகுதிகளை கேட்டதுதான் எடப்பாடி தரப்பை மிகவும் பாதித்துள்ளது.

இது குறித்து நாளை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் டிஸ்கஸ் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.