நாட்டின் 74-வது சுதந்திர தினம் நேற்று முன் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி செங்கோட்டையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்திலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். கட்சித் தலைவர்கள் அலுவலகங்களில் கொடி ஏற்றி வைத்தனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் முதன் முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதற்கு முன்பு தலைவராக இருந்த கருணாநிதி கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததில்லை. வழக்கமாக கட்சி நிர்வாகிகள் யாராவது தேசியக் கொடியை ஏற்றி வைப்பவர். இந்த முறை மு.க. ஸ்டாலினே தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிலையில் தேசியக் கொடியை மு.க. ஸ்டாலின் அவமதித்துவிட்டதாக அதிமுக சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாபு முருகவேல் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.


அந்தப் புகாரில், “தேசியக்கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்து கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை. கட்சிக்கொடியை ஏற்றுவது போல ஏற்றி, தேசியக்கொடியை அவமதித்துள்ளார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.