பொதுவாக இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாகவே உள்ளது. அதன் அடிப்படையில்  4 தொகுதி இடைத் தேர்தல்களில் ஆளும்அதிமுக சார்பில் போட்டியிட கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த 4 தொகுதிகளில்  திமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரமும் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆளும் அதிமுகவில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. மேலும் அக்கட்சியில் கடும் இழுபறி நீடிக்கிறது.

இது தொடர்பாக முடிவெடுக்க நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் இரவு 8 வரை நீடித்தது.  ஆனால் கூட்டம் முடிந்தும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக அதிமுக பக்கம் விசாரித்ததில், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளை பொறுத்தவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதற்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்துவது என அதிமுக சார்பில் முடிவெடுக்கப்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரன் முந்திக் கொண்டு  அமமுக சார்பில் இஸ்லாமிய வேட்பாளரை அறிவித்துவிட்டார்.

இதையடுத்து ஏற்கனவே செந்தில் பாலாஜியுடன் மோதிய செந்தில் நாதனை இறக்கலாமா என இபிஎஸ் யோசித்து வருகிறார். அதே நேரத்தில் முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் தங்களுக்கு சீட் வேண்டும் என்று ஒத்தைக்காலில் நிற்கின்றனர். அதனால் அங்கு இழுபறி நீடிக்கிறது,

திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தவரை வேட்பாளரை முடிவு செய்வதில்  ஓபிஎஸ்க்கும் , உதயகுமாருக்கும் ஓபன் போட்டி நடக்கிறது. ஏற்கனவே, மதுரை எம்.பி சீட் ராஜன் செல்லப்பா மகனுக்குச் சென்றுவிட்டதால் திருப்பரங்குன்றத்தில் தனது ஆதரவாளரே போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்று முடிவு செய்த ஓபிஎஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்துக்கு சீட் கேட்டு நிற்கிறார்.

ஆனால் அமைச்சர் உதயகுமார் தனது தீவிர ஆதரவாளரான வெற்றிவேலுக்கு சீட் கேட்கிறார். இது தவிர சினிமா ஃபைளான்சியர் அன்புச் செழியனும் சீட் கேட்டுள்ளார். இதையடுத்து அங்கு கடும் இழுபறி றீடிக்கிறது.