மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று  அக்கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தர். தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களையும் சரத்குமார் பெற்றிருந்தார். இந்நிலையில், கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆனபோதும் பிற கட்சிகளிடம் கையேந்தும் நிலையில் சமக இருப்பதாகக் கூறி சமகவின் 4 மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகினர். என்றாலும் தைரியத்துடன் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்தார் சரத்குமார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் சரத்குமாரை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்னையில் சந்தித்து பேசினார்கள். தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்யவும் அழைப்பு விடுத்தார்கள். இதுபற்றி சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலில் தன்னுடைய ஆதரவை அதிமுக கோரியுள்ளது. இதைப் பற்றி நான் தனித்து முடிவெடுக்க முடியாது. இன்று மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக” தெரிவித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சரத்குமார் வெற்றி பெற்றார். 2016-ல் அதிமுகவில் அவருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தன் பலத்தை அறியப் போவதாக சரத்குமார் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுகவில் ஸ்டார் பிரச்சாரகர்கள் குறைவாக இருப்பதால், கூட்டணிக்கு பிரசாரம் செய்ய சரத்குமாரை அழைக்க அதிமுக திடீரென முடிவு செய்தது. அதனைதொடர்ந்து சரத்குமாரை அதிமுக அணுகியது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.