திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் திருமண மண்டபத்தில் இருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் ஆடுதுறை பகுதி திமுகவினர் கூறியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில், தமிழக அரசின் பேரூராட்சி நிர்வாகத்திகீழ் செயல்படும் பேரூராட்சி திருமண மண்டபம் 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி பெயரில் இந்த திருமண மண்டபம் கட்டப்பட்டது. இதனை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திமுக ஆட்சியின்போது திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், மண்டபத்தின் முகப்பில் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், கோசி.மணி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றன. 

அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மண்டபத்தின் முகப்பில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்பட்டன. 

தற்போது, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் போட்டக்களும் சேர்க்கப்பட்டு, தலைவர்களின் படங்கள் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை எம்.பி. பாரதி மோகன் நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் கலையரங்க மற்றும் ரூ.17 லட்சம் செலவில் பேவர் பிளாக் தரைதளம் ஆகியவை மண்டபத்தில் அமைக்கப்பட்டன.

இதற்கான திறப்பு விழாவும் நடைபெற்றது. அப்போது, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திருமண மண்டபத்தை சுற்றிப்பார்த்தனர். மண்டபத்ன் முகப்பில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்த அதிமுகவினர், முதலமைச்சர்கள் வரிசையில் மு.க.ஸ்டாலின் படத்தை எப்படி வைத்துள்ளீர்கள் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டனர். 

இதன் பிறகு ஸ்டாலின் படத்தை பார்த்த அமைச்சர் துரைக்கண்ணு, பாரதிமோகன் எம்.பி இருவரும், இந்த பிரச்சனையைப் பிறகு பார்த்துக் கொள்ளலம் என்றும் அதிகாரிகளிடம் கூறி ஸ்டாலின் படத்தை எடுக்க வைத்துவிடலாம் என்று சமாதானம் செய்து விட்டு கிளம்பினர்.

இது குறித்து கேள்விபட்ட திமுகவினர், திருமண மண்டபத்தின் முகப்பில் ஸ்டாலின் படம் மாட்டியிருப்பது அதிமுகவினருக்கு ஏற்கனவே தெரியும். அதோடு முன்னாள் அமைச்சர் கோசி. மணியின் படமும் வைக்கப்பட்டிருந்தது. இப்போது புதிதாக போட்டே இருப்பதுபோல் அதிகாரிகளிடம் கூறி எடுப்பதற்கு அதிமுகவினர் அழுத்தம் கொடுத்துள்ளனர். 

திமுக ஆட்சியில் கோசி. மணியின் முயற்சியால் கட்டப்பட்ட இந்த திருமண மண்டபத்தில் இருந்து தளபதி படத்தை நாங்கள் எந்த காலத்திலும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று திமுகவினர் கூறுகின்றனர்.