அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள சசிகாலவுக்கு அதிமுக தொண்டர்கள் இடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சசிகலா பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை முதல்வர் பொறுப்பையும் ஏற்குமாறு அமைச்சர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், கோவை சூலூர், கண்ணம்பாடி பகுதிகளில் சசிகலாவை வாழ்த்தி வைக்கப்படிருந்த பேனர்களுக்கு போட்டியாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டன. காடுவெட்டிபாளையம், பாப்பம்பட்டி, கள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சசிகலா பொறுப்பேற்றதை பாராட்டி அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதற்காக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சசிகலா பேனர்கள் கிழிக்கபட்டுள்ளன. இதனால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுக தொண்டர்கள் கழட்டிச்சென்றனர்.

இதே போன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் 100 வது பிறந்த தினத்தை கொண்டாடுவது, தீபா பேரவையில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.