உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்கு திமுக தான் காரணம் என்ற குற்றச்சாட்டு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கோரி திமுக உயர்நீதிமன்றத்தை நாடியது. அதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பலமுறை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். வார்டு மறுவரையறை பணிகள் முடிந்தபிறகு தான் தேர்தல் நடத்தப்படும் என அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. 

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதியிலிருந்து கிடைக்க வேண்டியதில் 1950 கோடி ரூபாயை தமிழகம் இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்கு, திமுக தான் காரணம் என அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்று கூட அதிமுக மூத்த தலைவர் பொன்னையனும் திமுக மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஈரோட்டில் நடக்க உள்ள திமுக மண்டல மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக மீதான குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்கு திமுக தான் காரணம் என சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காகவே திமுக நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆட்சியாளர்களுக்கு இல்லை என ஸ்டாலின் விளக்கமளித்தார்.