அதிமுக தமிழகத்தில் இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் அதன் கூட்டணியில் பாஜக தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏதோ மிரட்டல் காரணமாக நான் பாஜகவில் அடைக்கலம் புகுந்ததாக செய்திகள் பரவுகிறது, அது கடைந்தெடுத்த பொய். நான் முறையாக ஜிஎஸ்டி வரியை செலுத்தவில்லை என்றும் அதன் பின்னணியில் எனக்கு பாஜக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்கிறார்கள், 

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளான அதிமுக-பாஜக திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் கூட சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு என தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திமுகவை கடுமையாக எதிர்ப்பது தொடங்கி பல்வேறு கட்சியில் உள்ள முக்கிய பிரமுகங்களை பாஜகவுக்கு இழுப்பது வரை பல வேலைகளில் பாஜக முனைப்புகாட்டி வருகிறது. இந்த வரிசையில்தான் அதிமுகவில் உள்ளவர்களைக் கூட தங்கள் கட்சிக்கு இழுக்கா வலை வீசி வருகிறது பாஜக. பாஜகவின் இந்த நடவடிக்கையை இதுவரை அதிமுக விமர்சிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. இது கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் விமர்சகர்கள் பாஜகவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சியில் இருந்தே ஆட்களை இழுக்கும் பாஜகவின் எந்த செயல் கூட்டணி கட்சிக்கு செய்யும் பச்சைத் துரோகம், அதிமுக பாஜகவின் பிடியில் சிக்கி விட்டது, அதிமுகவில் குரல்வளையை கடித்து மெல்ல மெல்ல அதன் ரத்தத்தை பாஜக உறிஞ்சிக் கொண்டு இருக்கிறது. நாளடைவில் அதிமுக என்ற கட்சியையே பாஜக என்ற கரையான் மெல்ல மெல்ல கரைக்க போகிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளார். 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஏற்படுத்திய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் முக்கிய உறுப்பினராக அவர் இடம்பெற்றிருந்தார். அதிமுகவில் வழிகாட்டு குழுவை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பாஜகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் தான் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

அவரின் இணைவு அதிமுக பாஜக கூட்டணியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பலரும் மாணிக்கத்தின் செயலை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஒரு கட்சியில் வழிகாட்டுதல் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்த மாணிக்கம் திடீரென பாஜகவுக்கு தாவியது அதிமுகவுக்க செயத துரோகம் என விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் மிரட்டல் காரணமாகவே அவர் அக்கட்சியில் இணைந்ததாகவும் கருத்து பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு மாணிக்கம் அளித்துள்ள பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 15 ஆண்டுகளாகவே அதிமுகவில் தான் இருந்தேன், அந்த காட்சியில் எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தேசிய அளவில் மிகப் பெரிய கட்சியான பாஜகவில் இணைய வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசையில் இருந்தேன். அக்காட்சியில் இணைவதற்கு முன்பாக அதிமுகவிலிருந்து விலகி தனிமைப் படுத்திக் கொள்கிறேன் என்று என்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிமுகவில் கொடுத்துவிட்டேன். அதன் பிறகுதான் நான் பாஜகவில் இணைந்தேன். எனவே நான் கட்சி தாவியதாக யாரும் கூற முடியாது. அதிமுகவை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க முயற்சி நடக்கிறது என சிலர் கூறுவது முற்றிலும் தவறானது.

அதிமுக தமிழகத்தில் இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் அதன் கூட்டணியில் பாஜக தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏதோ மிரட்டல் காரணமாக நான் பாஜகவில் அடைக்கலம் புகுந்ததாக செய்திகள் பரவுகிறது, அது கடைந்தெடுத்த பொய். நான் முறையாக ஜிஎஸ்டி வரியை செலுத்தவில்லை என்றும் அதன் பின்னணியில் எனக்கு பாஜக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்கிறார்கள், ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எம்எல்ஏ ஆவதற்கு முன்பாகவே ஒரு கட்டுமான நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தேன். அதை நான் என்னுடைய பிரமாண பத்திரத்தில்கூட தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். எம்எல்ஏ ஆவதற்கு முன்பு வரை எனது கம்பெனியின் விற்பனை 80 லிருந்து 90 கோடியாக இருந்து வந்தது. ஆனால் நான் எம்எல்ஏ ஆனபிறகு 10, 15 கோடியாக சுருங்கிவிட்டது இதுதான் உண்மை. எனது முழு விவரத்தையும் நான் அபிடவிட்டில் தெளிவாக தெரிவித்திருக்கிறேன். எனவே வருமான வரித் துறைக்கு அல்லது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. எனவே பாஜக மிரட்டலுக்கு பயந்து நான் பாஜகவில் சேர்ந்து விட்டேன் என்று சொல்வது வடிகட்டிய பொய். என் விருப்பத்தின் பெயரிலேதான் நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.