சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. அந்தக் கூட்டணியில் உள்ள பாஜக 40 தொகுதிகளிலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஆனால், அதிமுக தரப்பில் 20 முதல் 25 தொகுதிகள் வரை வழங்க உத்தேசித்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாயின. என்றாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி உடன்பாடு நிறைவேறவில்லை.
இதன்பின் சற்று இறங்கிவந்த பாஜக 30 தொகுதிகள் வரை கேட்டுப் பார்த்தது. ஆனால், 170  தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ள அதிமுக, தொகுதிகளை அதிகரித்து வழங்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக பாஜகவுக்கு எடுத்துச் சொல்லிவிட்டது. மேலும் 20 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என்பதிலும் அதிமுக உறுதியாக இருந்தது. எனவே, அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நீடித்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட சம்மதித்துள்ள பாஜக, அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு முடிவானது. மின்னஞ்சல் மூலமாகவே அதிமுக - பாஜக இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தில் அதிமுக  தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பாஜக தரப்பில் சி.டி. ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரி இடைத்தேர்தலிலும் பாஜகவே போட்டியிடுகிறது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.