தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ள பாஜக  தலைவர்கள் தமிழிசை, எச்.ராஜா ஆகியோருக்கு அதிமுக தடை விதித்திருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளை அதிமுக முழுமையாக களமிறக்கி உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அறிவித்தார். பிற கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் நிலவிவருகிறது.

 
இந்நிலையில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோருக்கு அதிமுக தலைமை தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலை இருப்பதால், பிரசாரத்துக்கு வந்தால், அது தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் என்று கருதி அவர்களை பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல்கள் உலா வருகின்றன. குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியவர் என்பதால், பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று அதிமுக தலைமை நினைப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இதேபோல ஒட்டப்பிடாரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனை பிரசாரத்துக்கு அழைக்க அதிமுக விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும் ஜான்பாண்டியனுக்கு ஆகாது என்பதால், ஜான்பாண்டியனை அதிமுகவினர் புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மூன்று தலைவர்களும் பிரசாரத்துக்கு வர அதிமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.