உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

 
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகித்துவருகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 
தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆளும் அதிமுக உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அதிமுக தலைமை இன்று அறிவித்துள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சித் தலைவருக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.