Asianet News TamilAsianet News Tamil

ஜன.22 டெல்டா மாவட்டங்களில் போராட்டம்... அறிவித்தது அதிமுக தலைமை!!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ஜன.22 அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

admk announced protests in delta districts on Jan 22
Author
Tamilnadu, First Published Jan 19, 2022, 9:43 PM IST

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ஜன.22 அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுக்குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி என்றாலே அது மக்கள் விரோதச் செயல்களில் தயங்காமல் ஈடுபடும் என்பதும் எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் அந்தக் கட்சியினர் தீவிரமாக இருப்பார்கள் என்பதும் சட்டம் - ஒழுங்கு திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் என்பதும் குடும்ப ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் என்பதும் பொய், பித்தலாட்டம் சர்வ சாதாரணமாக நடைபெறும் என்பதும், தமிழ் நாட்டில் நிலைபெற்றுவிட்ட வரலாற்று உண்மைகள். கடந்த கால தவறுகளில் இருந்து, ஓரளவுக்காவது பாடம் படித்து திமுகவின் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துவார் என்று மக்கள் மத்தியில் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் முற்றிலுமாகத் தகர்ந்து போய்விட்டது. தமிழ் நாட்டில் விவசாயப் பெருங்குடி மக்கள் இயற்கை சீற்றத்தைத் தாண்டியும், ஒரு சாகுபடி ஆண்டில் நம்பிக்கைக்குரிய நெற்பயிராக விளங்கும் என்ற எதிர்பார்ப்போடு, செய்யும் வேளாண்மைதான் சம்பா மற்றும் தாளடி விளைச்சல். ஆனால், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களிலும், அதை ஒட்டியுள்ள வேறு சில மாவட்டங்களிலும், டிசம்பர் மாதத்திலும், ஜனவரி மாதத் தொடக்கத்திலும் பெய்த கனமழை, அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் எதிர்காலத்தைக் கோள்விக்குறியாக்கி இருக்கிறது. வடகிழக்கு பருவ மழைக் காலம் முடிந்த பிறகும், எதிர்பாராத வகையில் பெய்த கனமழையால் வயல்வெளியெங்கும் குளம் போல் தண்ணீர் தேங்கி இருந்ததன் காரணமாக, விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களை அறுக்க முடியவில்லை.

admk announced protests in delta districts on Jan 22

மழைக்கு முன் அறுத்து களத்திற்குக் கொண்டு வந்து போரடித்து மூட்டைகளாகக் கட்டப்பட்ட, பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தமிழ் நாடு அரசால் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாததன் காரணமாக, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியிலும், மற்ற நெல் சேமிப்பு இடங்களிலும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. கடந்த ஆண்டு குறுவை பயிரும் தங்களுக்கு எந்தப் பலனும் அளிக்காத நிலையில், சம்பா மற்றும் தாளடி சாகுபடியை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகள் இப்பொழுது பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி, கடனாளிகளாக மாறி இருக்கிறார்கள். எதிர்காலம் குறித்த பேரச்சம் அவர்களிடம் நிலவுகிறது. 2021ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது, இதுபோன்ற பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அதிமுக அரசு, உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததன் காரணமாக, டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதை சுட்டிக் காட்டியும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைத்து உரிய ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்தி, கழகத்தின் சார்பில் ஏற்கெனவே அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். ஆனால், விடியா திமுக அரசு இதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

admk announced protests in delta districts on Jan 22

இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெருமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்காத விடியா திமுக அரசைக் கண்டித்தும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து, வருகின்ற 22.1.2022 சனிக் கிழமை காலை 10.30 மணியளவில் டெல்டா மாவட்டங்களில், தாலுக்கா அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். விவசாயிகளுக்கு எதிரான விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், வாழும் மனிதருக்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் விவசாயப் பெருங்குடி மக்களின் துயர் துடைக்கவும் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், விவசாயிகளும், பொதுமக்களும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios