நாடாளுமன்றத்தில் திமுகவும், அதிமுகவும் ஆதரித்த இரு சட்டங்கள் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 நாடாளுமன்றத்தில் அண்மையில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டுவந்தார். இந்தத் திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே ஆதரித்தன. இரு கட்சிகளும் திருத்த மசோதாவை ஆதரித்திருந்தாலும், திமுக ஆதரித்தது பொதுவெளியிலும் இஸ்லாமியர்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தன. அந்தத் திருத்த சட்டத்தை ஆதரித்தது தொடர்பாக திமுக கொறடா ஆ. ராசா அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.


என்.ஐ.ஏ.  திருத்த சட்டத்தை திமுக ஆதரித்ததை சமூக ஊடங்களில் இஸ்லாமியர்கள் பலரும் கடுமையாகக் குறை கூறியிருந்தார்கள். அதிமுகவும் இந்தச் சட்டத்தை ஆதரித்திருந்தாலும், நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் திமுக ஆதரித்ததை சமூக செயற்பாட்டாளர்களும் குறைகூறிவருகிறார்கள். இது வேலூர் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்தது. வேலூரில் 3 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்களின் வாக்கு உள்ளதால், இந்த கேள்வி எழுந்தது.


வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற பகீரத முயற்சிகளை செய்துவருகிறது அதிமுக. மாநிலங்களவைத் தேர்தலில் வேலூரைச் சேர்ந்த முகமது ஜானுக்கு அதிமுக சீட்டு வழங்கியதும் அந்த அடிப்படையில்தான். இதுபோன்ற சூழலில் திமுகவின் என்.ஐ.ஏ. திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளித்தது அதிமுகவுக்கு இனிப்பான செய்தியாகவே இருந்தது. இதனால், திமுகவுக்கு வாக்களிக்க இஸ்லாமியர்கள் தயங்குவார்கள் என்றும், ஒரு வேளை தங்களுக்கு வாக்களிக்காமல் போனாலும் திமுகவுக்கு வாக்குக் குறையும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினருக்கு இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.
ஆனால், முத்தலாக் தடைச் சட்டத்துக்கு அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது, திமுகவுக்கு பூஸ்ட்டைக் கொடுத்திருக்கிறது. இந்த சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பில் திமுக பங்கேற்காமல் எதிர்த்து வெளிநடப்பு செய்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பு இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்த 37 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அதிமுக, இப்போது ஒரே ஒரு உறுப்பினர் மூலம் ஆதரவு தெரிவித்து பல்டி அடித்துவிட்டது.

 
அதிமுகவின் இந்த ஆதரவு திமுகவுக்கு கற்கண்டு கிடைத்ததைப்போல ஆகிவிட்டது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். வேலூரில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முத்தலாக் தடைச் சட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவு, அதிமுக நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘ஜெயலலிதாஅரசு முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நின்றது. அதேபோல் தான் நாங்களும் நிற்கின்றோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதனால், முத்தலாக் விஷயத்தில் அதிமுகவின் நிலைப்பாடு கேள்விகுறியாகிவிட்டது.
என்.ஐ.ஏ. திருத்த சட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்ததால், வேலூரில் நிறைந்திருக்கும் இஸ்லாமியர்கள் திமுகவை எதிர்ப்பார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், முத்தலாக்  தடை சட்டத்துக்கு ஆதரவு அளித்ததன் மூலம் வேலூரில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மாறாக, என்.ஐ.ஏ. திருத்த சட்டம், முத்தலாக் என இரு சட்ட மசோதாக்களையும் அதிமுக ஆதரித்திருப்பது இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள வேலூரில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் ஆளுங்கட்சியினர் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.