வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்கனவே திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதில் மதிமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை எதிர்த்து அதிமுகவிலும் ஒரு மெகா கூட்டணி உருவாக உள்ளது. இதற்கான திரைமறைவு வேலைகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வருகிறது. இதனை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முன்னிறுத்தி ஒருங்கிணைத்து வருகிறார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடையே அவர் பேசும்போது, அம்மாவோட ஃபேஸ் வேல்யூ இப்ப நம்ம கட்சில யாருக்கும் இல்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலை மீண்டும் மோடியை பிரதமர் ஆக்குவோம் என்று சொல்லி முன்னிறுத்தி சந்திப்பதுதான்  நல்லது என கூறியுள்ளார்.

இந்த பிளானை எடப்பாடி பழனிசாமி அரை மனதுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.. மேலும் இக்கூட்டணியில் தேமுதிக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் இடம்பெறுவதை ஏற்கனவே பல்வேறு திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மூலம் முடித்துவிட்டது அதிமுக.

அதிமுக 20 இடங்களில் போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது, பாஜகவுக்கு10 இடங்களும், பாமகவுக்கு 5 இடங்களும், தேமுதிக 4 இடங்கள், புதிய தமிழகம் 1 என்ற நிலைமையில் தற்போதைய சீட் ஷேரிங் இருக்கிறது. இதில் பாமகவுக்கான 5 இடங்களில் புதுச்சேரியும் அடக்கம் என்கிறார்கள். இதில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சீட் ஷேரிங் விஷயத்தில் ஒரு பெரிய புயலே உருவாகலாம் என்கின்றனர் அதிமுகவினர். இந்நிலையில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி மோடி திருப்பூர் வரும்போது அந்த மேடையிலேயே கூட்டணி அறிவிக்கப்படலாம் என தகவ்லகள் வெளியாகியுள்ளன.