admk amma party runby sasikala.... vijila press meet

பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவுறுத்தலின் பேரில் தான், பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக உடைந்த பிறகு சசிகலா தலைமையில் செயல்பட்டு வந்த அணி, அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி.தினகரன் வழிகாட்டுதலின்படி செயல்பட்டது. ஆனால் தினகரனும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, அந்த அணி எடப்பாடி பழனிசாமி அணியாக மாறியது.

இந்நிலையில் தினகரன் சிறையில் இருந்து திரும்பியதையடுத்து கட்சிப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்தார். இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து 34 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் விருதுநகர் கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் போன்ற எம்பிக்களும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில் நேற்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்ந் எம்.பி, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவுறுத்தலின் பேரில் தான், பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார்.