Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள், திமுக காங்கிரஸ்க்கு 27 + 1 இடங்களை வழங்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக காங்கிரஸ்க்கு 27 + 1 இடங்களை வழங்குமா?

admk allots 20 constituencies to bjp and can dmk allot 27 seats to congress fot tamil nadu assembly election
Author
Chennai, First Published Mar 6, 2021, 2:27 PM IST

பாஜக 30 முதல் 40 வரை இடங்களை எட்டும் என்று கூறப்பட்ட நிலையில், அதிமுக  கூட்டணியில் பாஜகவிற்கு 20 சீட்டுகள் என வெள்ளிக்கிழமை இரவு இறுதி செய்யப்பட்டது. இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணியை முடித்து விட்டு முதல் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து, தேர்தல் ஓட்டத்தில் முதலில் இருக்கிறது அதிமுக. மற்றோரு பக்கம் திமுக காங்கிரஸ் மத்தியில் ஒரு அசாதாரண சூழல் நிலவி, உறவு முறியும் தருவாயில் உள்ளது. வெள்ளிக்கிழமையன்று  சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாக கூட்டத்தில், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கண்ணீருடன் கூறிய கருத்துக்களே இதற்கு சான்று.

கொடுக்கும் இடங்களை விட, மரியாதை இன்னும் குறைவாக உள்ளது என அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற  கட்சிகள் உடனான பேச்சு வார்த்தையில் இன்னும் இழுபறியில் தான் உள்ளன. வெறும் 6 தொகுதிக்கு ஒப்புக்கொண்ட திருமாவளவனும் வி.சி.கவினரும் அதிருப்தியில் தான் உள்ளனர். இப்படி திமுக கூட்டணியை சுற்றி ஒரு பரபரப்பான சூழல் தான் நிலவி வருகிறது. 

இதுபோன்ற சமயங்களில் டெல்லி தலைமை மாநில கூட்டணி தலைமையோடு தொலைபேசி மூலமாக அணுகி, சுமுகமாக பேச்சு வார்த்தையை முடிப்பார்கள். ஆனால் இம்முறை அது எதுவாக இருந்தாலும் சரி, நீங்களே  முடிவெடுத்து கொள்ளுங்கள் என்று சோனியா காந்தி கூறியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வீரப்ப மொய்லி, உம்மன் சாண்டி, ரந்தீப் சுர்ஜேவாலா, தினேஷ் குண்டுராவ் போன்றோர் பெரிய குழப்பத்தில் உள்ளனர். மேலும் நடைபெற்ற கூட்டத்தில் கேட்கும் 27+1 இடங்களை திமுக அளிக்கவில்லை என்றால், தனித்து போட்டியிடலாம் என தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் பெரும்பாலான நிர்வாகிகள். காங்கிரஸ் கேட்டுள்ள 27 + 1 தொகுதிகளை திமுக வழங்குமா ! என்ற ஒரு கேள்வி தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பாக பேசப்பட்டு வருகிறது. 

234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள 7,700 பேருக்கு காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த பின்னரே திமுகவுடன் அடுத்தகட்ட பேச்சு வார்த்தையென கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். திமுகவும் நாளை திருச்சியில் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ள நிலையில் காங்கிரஸ் உடனான பேச்சு வார்த்தை தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை.

மார்ச் 12 முதல் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில் இன்னும் இழுபறி நீடித்து கொண்டிருக்கிறது. 3% வாக்கு வங்கியுடைய பாஜகவிற்கு 20 சீட்டுகள் கொடுக்கபட்ட நிலையில், 7% சதவிகிதம் வாக்கு வங்கியுடைய  காங்கிரஸிற்கு 25 சீட்டுகளை திமுக வழங்கினால் கூட அது தகுமா ? என்ற கேள்வியை அரசியல் பார்வையார்கள் முன்வைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios