கடந்த 8ம் தேதி மோடியின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லா காசாகிபோனது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மோடியின் அறிவிப்பை நேரடியாக எதிர்க்காமல் மக்கள் படும் சிரமங்களை சுட்டிக்காட்டி அவ்வப்போது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

ஆனால், பிரதான கட்சியான அதிமுக தரப்பிலிருந்து எந்தவிதமான ஆதரவு கருத்தோ, எதிர் கருத்தோ வெளிவராமல் இருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி முதல் நாள் விவாதம் இன்று நடைபெற்றது.
இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநிலங்களவை குழு தலைவர் நவநீதகிருஷ்ணன் எம்.பி.பேசினார். அதில், முதன் முறையாக இன்று மோடி அறிவித்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்பதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தேவையான ஏற்பாடுகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழக கிராமங்களில் சுப காரியங்கள் தடை பட்டுள்ளதாகவும், மருந்து செலவுகளுக்கும் பணம் இல்லாமல் மக்கள் திண்டாடுவதாகவும், உச்ச கட்டமாக மரணமடைந்தவர்களை அடக்கம் செய்வதற்காக காசில்லாமல் மக்கள் தவிப்பதாக நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

கருப்பு பணத்தை ஒழிக்க எப்போதுமே தங்கள் தலைவி ஜெயலலிதா ஆதரவு தெரிவிப்பதாகவும், ஆனால் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதிகம் பாதிக்கப்பட்டது என்னமோ கிராமப்புற மக்கள்தான்.
பணக்காரர்கள் ஏற்கனவே தங்கக்கட்டிகளாக கருப்புப்பணத்தை மாற்றிவிட்டார்கள் என்ற புது குண்டையும் போட்டார் நவநீதகிருஷ்ணன்.

தற்போதைய உலகில் பணம்தான் கடவுள். பணமில்லாமல் வாழவே முடியாது என்ற நிலை உள்ளதால் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும்,முன்னறிவிப்பில்லாமல் மக்களை வாட்டி வதைப்பதற்கு அதிமுக தரப்பில் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
மோடியின் அதிரடி அறிவிப்பு வெளியாகி 8 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அதிமுக தற்போது தான் வாய் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
