admk 46th anniversery day ...ttv dinakaran announced

இபிஎஸ் – ஓபிஎஸ் அணியினரின் அதிமுகவினர் அறிவிக்கும் முன்பே அதிமுகவின் 46 ஆவது ஆண்டு தொடக்க விழா, வரும் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார்.

தொடர்ந்து ஆண்டுதோறும் அதிமுக தொடங்கிய விழா அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், அவரது ஒப்புதலோடு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் விழா நடைபெற்றது.

தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து மீண்டும் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து, சசிகலா, தினகரன் நீக்கப்பட்டனர். தற்போது தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் வரும் 17ஆம் தேதி அதிமுகவின் 46ஆவது தொடக்க நாள் நிகழ்வு வரவுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த அணிகள் தயாராவதற்கு முன்பே தினகரன் அணி தயாராகிவிட்டது.

இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , அ.இ.அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை, தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

புரட்சித்தலைவரின் மறைவுக்கு பிறகு, பிளவுபட்ட கழகமாய், தலைவன் இல்லாத படையாய் தவித்த வேளையில், வீரமங்கையாய் தியாகத்தாயாய் புரட்சித்தலைவரின் வழியில் கழகத்தினரை வழிநடத்தி பிரிந்த இயக்கத்தை ஒன்றாக்கி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து தமிழக மக்களின் பேரன்பை பெற்ற மாபெரும் தலைவி நம் அன்புத்தாய் புரட்சித்தலைவி அம்மா என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்



தன்னையே உருக்கி இந்த இயக்கத்தையும் தமிழக மக்களையும், தமிழக உரிமைகளையும் வாழவைத்த அம்மா, இன்று நம்மிடம் இல்லை - எனினும் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் நம்முன் தெய்வங்களாக இருக்கிறார்கள் -

இந்த ஆண்டு அ.இ.அ.தி.மு.க அம்மா அணியாக நின்று, கழகத்தின் 46-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம், சத்தியமாக சொல்கிறேன், சபதம் ஏற்று சொல்கிறேன், அடுத்தாண்டு அ.இ.அ.தி.மு.க என்ற அடையாளத்தோடும் அம்மாவின் ஆட்சியோடும் நம் கழக ஆண்டுவிழாவை நாம் கொண்டாடத்தான் போகிறோம் - அதற்கான நம் வெற்றி பயணத்தை இந்தாண்டு தொடங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதிமுக தொடக்க விழா தொடர்பாக அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடும் முன்பே வெளியிட்டு முந்திக் கொண்ட டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்த உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளார்.