தர்பார் படப்பிடிப்பின் முதல் கட்டத்தை நிறைவு செய்து விட்டு சென்னை திரும்பிய ரஜினி நேற்று முதலே தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க தொடங்கியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்று கூறிவிட்டு மும்பையில் தர்பார் படப்பிடிப்புக்கு சென்று விட்டார் ரஜினி. அதே சமயத்தில் தமிழகத்தில் மக்கள் மன்றம் பணிகள் மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி நேற்று காலை முதலே முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்து பேச ஆரம்பித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது நண்பர்களையும் தொலைபேசியில் அழைத்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து மிகத் தீவிரமாக ரஜினி பேசியுள்ளார். 

குறிப்பாக நேற்று ரஜினி வீட்டுக்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலரும் சென்றுள்ளனர். அவர்களுடன் ரஜினி தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து நீண்ட நேரம் ரஜினி ஆலோசித்துள்ளார். இன்னும் சில நாட்களில் சென்னையில் இருக்க உள்ள ரஜினி அடுத்தடுத்து சில அமைப்புகளின் தலைவர்களையும் வீட்டிற்கு அழைத்து பேச திட்டமிட்டு உள்ளதாகக் கூறுகிறார்கள். மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைச் சரி செய்து புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று ரஜினி திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக புதிதாக ஒருவரை மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகியாக நியமிக்க ரஜினி யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில நாட்களில் ரஜினி அரசியல் ரீதியிலான சில முடிவுகளை அறிவித்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் போயஸ் கார்டனில் தென்படுவதாக அங்கு சென்று திரும்பிய பத்திரிக்கையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.