மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக - சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும்,  யார் முதலமைச்சர் என்ற கோதாவில்  கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, 105 எம்எல்ஏக்கள் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது.
இதனையடுத்து இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க இன்று இரவு 7.30 மணி வரை அக்கட்சிக்கு ஆளுநர் கால அவகாசம் அளித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியமைக்க சிவசேனா இன்று காலை முதல் பேச்சுவார்த்தையை துவங்கியது. முதல் கட்டமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையின் படி,  மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் பதவி விலகுவதாகவும் அறிவித்தார். அதன் பின்னர், தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சிவசேனா தலைவர்கள் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டனர்.

இந்தநிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோருடன் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மாலை நான்கு மணியளவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அரசாங்கத்தை அமைப்பது குறித்து தொலைபேசியில் பேசினார். இதையடுத்து, காங்கிரஸ் சிவசேனாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சிவசேனா தலைவர் , ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் ஆளுநரை சந்திதித்னர். அப்போது  ஆட்சி அமைக்க ஆத்த்ய தாக்ரே ஆளுநரிடம் 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டார். ஆனால் ஆளுநர் உடனடியாக முடிவு எதுவும் சொல்லாமல் அனுப்பியுள்ளார்.