”மக்கட் செல்வர் தினகரன்! மக்கட் செல்வர் தினகரன்னு புகழ்ந்த இந்த வாயா என்னை இப்படி ’அட்ரஸ் இல்லாத தினகரன்’ன்னு தூற்றியது? ஏன் இப்படி மாறிட்டீங்க கோப்பால்?” என்று புதியபறவை சிவாஜி கணேசன் போல் புகழேந்தியை பார்த்து தினகரன் கதறுமளவுக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது அந்த வீடியோ. 

கோயமுத்தூர் மாவட்ட அ.ம.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட மற்றும் அங்கே இன்னும் கோலோச்சுகிற நிர்வாகிகள் சிலரை அதே கோயமுத்தூரில் சமீபத்தில், அக்கட்சியின்  கர்நாடகமாநில செயலாளரான பெங்களூரு புகழேந்தி சந்தித்தபோது, தினகரனுக்கு எதிராக தாறுமாறாக பேசியதாக ஒரு வீடியோ பதிவு சக்கப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த  ஆவணத்துக்கு தினகரனின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் பற்றியெல்லாம் இன்னும் வெளிப்படையான விபரங்கள் ஒன்றும் வெளியாகவில்லை. ஆனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேறும் முடிவுக்கு புகழேந்தி வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது! என்கிறார்கள்.

 

பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய சிட்டிகளை சேர்ந்த தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் தொடர்ந்து ரகசிய ஆலோசனைகளில் இருந்தாராம் புகழேந்தி. ’தினகரன் போற ரூட் சரியில்லை. நான் அம்மாவுக்காகவும், அப்புறம் சின்னம்மாவுக்காகவும்தான் இன்னமும் தாக்குப் பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டு இருக்கிறேன். டி.டி.வி. மேலே இருக்கிற கோவத்துல எனக்கு அப்பப்ப ஐ.டி. ரெய்டு அதுயிதுன்னு குடைச்சல் தகவல்களை தந்துட்டே இருக்குது ஒரு பவர்ஃபுல் லாபி. ஆனா என்னோட நிலைமையை மட்டுமில்லை கட்சியின் உண்மையான விசுவாசிகள் யாரோட நிலைமையையும் புரிஞ்சுக்காம தன் இஷ்டத்துக்கு அரசியல் பண்ணிட்டு இருக்கிறார் தினகரன்.

எந்த இலக்கும் இல்லாமல் அரசியலில் பயணிக்கிறார். இதை நான் மட்டுமில்லை  பல முக்கிய நிர்வாகிகள் சொல்லி புலம்பிட்டு இருக்கிறாங்க. வெளியில்  போன முக்கிய நிர்வாகிகளின் புலம்பலும் இதுவேதான். சின்னம்மா வெளியில் வந்து, புது உத்வேகம் கிடைக்கும் வரை தாக்குப் பிடிக்கலாம்னு பார்த்தால் அது நடக்காது போலிருக்குதே!” என்று வருந்திக் கொட்டினாராம். அந்த தொடர் வருத்தத்தின் வெளிப்பாடுதான் அந்த ஆடியோவில் வந்த அடிச்சுத் தூக்கிய அரசியல் வார்த்தைகள் என்கிறார்கள்.