ஏற்கனவே சென்னைக்கு போதுமான அளவுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த  கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், சென்னையில் கூடுதல் தளர்வு இருக்குமா என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,  ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். என்றார் தொடர்ந்து பேசிய அவர்,

 

ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான். கொரோனா ஒரு புதிய தொற்று நோய். ஊடக நண்பர்களில் பலர் பாதிக்கப்பட்டு, ஒருவர் இறந்தும் உள்ளார். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே, தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இதற்கு மருந்து. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., நம்முடைய மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் தெரிவிக்கின்ற ஆலோசனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெளியில் செல்லும்போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 

எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பும்பொழுது கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவியபின் உள்ளே செல்ல வேண்டும். வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், வீட்டிலிருக்கும் கழிப்பறைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தெருக்களில் இருக்கின்ற பொதுக்கழிப்பறைகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். இந்த நோயைக் குறைப்பதற்கு இதுதான் வழி. ஒவ்வொருவரும், தாங்களாக, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் நாம் இயல்புநிலைக்கு எளிதாகத்திரும்பிவிடலாம். 

இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருந்தால் மருந்தை உடம்பில் செலுத்தி குணமடையச் செய்து விடலாம். பிளாஸ்மா சிகிச்சை நாம் மேற்கொண்டு வருகிறோம், அது நல்ல பலனை அளிக்கிறது. சென்னையில் 57 நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையைக் கொடுத்திருக்கிறோம். பெரும்பாலானவர்கள் குணமடைந்து இருக்கிறார்கள். எனவே, தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பி 14 நாட்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தால் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.என அவர் கூறினார்.