தூத்துக்குடி, நெல்லை மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்கள்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி சரவெடி!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி, நெல்லை மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்களையும் அரசு அலுவலர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா. பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் – காயல்பட்டினம் பகுதிகளுக்கு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் நியமனம்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான், இவர்களுடன் கூடுதலாக சிறப்பு முயற்சிகள் செயலாக்கத் துறை செயலாளர் டாக்டா தாரேஷ் அகமது மற்றும் சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைத்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்குதல், வெள்ளத்தால் சூழ்ந்துள்ளோரை மீட்கும் பணியினை ஒருங்கிணைக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் மதுரையிலிருந்து பணியாற்றவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அம்மாவட்டங்களுக்கு சென்று பணியாற்றிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அத்துடன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் - சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா ஆகியோர் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.