ஆந்திர சட்டமன்றத் தோ்தலில் ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆந்திரா முதல்வராக ஜெகன்மோகன் கடந்த 30ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அமைச்சா்கள் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் ஜெகன்மோகன் தலைமையிலான அக்கட்சி சட்டமன்ற உறுப்பினா்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்குவது என ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில் வெவ்வேறு சமூகங்களைச் சோ்ந்த 5 உறுப்பினா்களை துணைமுதல்வர்களாக நியமிக்க உள்ளதாக தெரிவித்தார்.


அதன்படி தற்போது ஐந்து துணை முதல்வா்களை தோ்வு செய்யும் பணி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கட்சியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்ட முக்கிய தலைவா்களில் ஒருவரான நடிகையும், நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவை துணைமுதல்வராக தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு சிறிது காலத்திலேயே அக்கட்சியை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சோ்க்கும் பணியை ரோஜா சிறப்பாக செய்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். துணைமுதல்வா் பொறுப்பு வழங்கப்படாவிட்டாலும் ரோஜாவுக்கு அமைச்சரவையில் நிச்சயம் முக்கிய பொறுப்பு ஒதுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சமூகமான ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர் ரோஜா.