*   சைபர் குற்றங்கள் அதிகளவில் நடப்பதால், வருங்காலத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் சைபர் குற்றங்களை கையாளும் ஸ்டேஷன்களாக மாறும். ‘போக்சோ’ வழக்குகளுக்கு தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது போல், சைபர் குற்றங்களுக்கும் தனி நீதிமன்றம் வரும். இதுவரையில் நூறுக்கணக்கான ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இது போன்ற தளங்களை பார்வையிட்ட கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நபர்கள் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. பட்டியலின் அடிப்படையில் ஆபாச இணையதளங்கள் பார்க்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 
- ரவி (ஏ.டி.ஜி.பி.)

*   குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்ததன் மூலம், தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அ.தி.மு.க. இழைத்துவிட்டது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க, தமிழக முதல்வர் இ.பி.எஸ். யார்? அது இலங்கை தமிழர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம். 
- நாராயணசாமி (புதுவை முதல்வர்)

*   ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட போராட்டத்திற்கு தமிழகத்தில் என்றுமே அனுதி உண்டு. அதில் பிரச்னை இல்லை. ஆனால், சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் விஷ விதையை தூவலாம் என சிலர் நப்பாசை கொண்டு  துடியாய் துடிக்கின்றனர். தமிழக மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். 
- ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)

*   அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவில் மாற்றம், முத்தலாக் தடைச்சட்டம், பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு போன்றவற்றில் பொது மக்களின் கோபம் வெளிப்படவில்லை. மாறாக, குடியுரிமை சட்டத்தில் கோபம் கொந்தளிப்பதற்கு காரணம், மத ரீதியாக நாட்டை துண்டாடுவதற்கு மத்திய அரசு முயல்வதே. இதை மக்கள் வன்மையாக எதிர்க்கின்றனர். 
- கோபண்ணா (காங் செய்தி தொடர்பாளர்)


*   பா.ஜ.க.வை வலுப்படுத்துவதுதான் என் சிந்தனை. தூத்துக்குடியில் சிலரை பார்த்து பேசி, பா.ஜ.க.வில் சேர்க்க முயற்சித்து வருகிறேன். அந்த வகையில் நடிகை நயன் தாராவையும், சந்தித்து பேசினேன். பா.ஜ.க.வில் சேர வர்புறுத்தினேன். மறுப்பு சொல்லவில்லை, தலையாட்டியுள்ளார். விரைவில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து கட்சியில் இணைவார். 
-நரசிம்மன் (மாஜி எம்.பி.)

*  பா.ஜ.க.வின் குருபீடம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம். அங்கிருந்து வரும் உத்தவுபடியே, பா.ஜ. செயல்படும். அந்த வகையில் விரைவில் நாடு முழுவதும் ஒரே சட்டத்தை அமல்படுத்த உள்ளனர். எனவே குருபீடத்தை அகற்றுவதே நம் கடமையாக இருக்க வேண்டும். 
- பூங்குன்றன் (திராவிடர் கழக துணை தலைவர்)

*   யார் வேண்டுமானாலும் வந்து தங்குவதற்கு இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை. 130 கோடிக்கும் அதிகமான மக்களின் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதில், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கு எதற்காக குடியுரிமை வழங்க வேண்டும்? அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும். 
- ராஜ் தாக்கரே (மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர்)

*   உலக அழகி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எனினும், நாட்டின் சார்பில் சர்வதேச அரங்கில் நின்றதும், இந்தியா இந்தியா என ரசிகர்கள் கோஷமிட்டதை கேட்டபோது, என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்த வெற்றி, நான் சார்ந்த சமூக மக்களின் மனதில் பெரும்  மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
- சுமன் ராவ் 

*   வைகோவை தி.மு.க.விலிருந்து வெளியேற்றியபோது எட்டு இளைஞர்கள் தீக்குளித்து இறந்தனர். இன்று வைகோ ஸ்டாலினின் காலடியில் உள்ளார். அவருக்காக தீக்குளித்தவர்கள் பற்றி அவர் இப்போது கவலைப்படவில்லை. எனவே தூண்டிவிட்டு, பின்னாடி ஒளிந்து கொள்ளும் அரசியல் மண்குதிரைகளை நம்பி மாணவர்கள் போராட வேண்டாம். பாடத்தை படித்து முன்னேறுங்கள். 
-  ஹெச்.ராஜா (பா.ஜ.க. தேசிய செயலர்)

*   ஜெயலலிதா மறைந்த பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் சிறப்பாகவே இருக்கிறது. ஆட்சி, அரசு நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் அவர். ஜெ., திட்டங்களை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார். ஜெ., மீது மக்கள் வெச்சிருந்த நம்பிக்கை, இவர் மீது உள்ளதா என தெரியவில்லை. 
- நமீதா (நடிகை)