கடந்த சில மாதங்களாகவே நடிகை குஷ்பு பாஜக கட்சியில் இணைய உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து மறுத்து  வந்த இவர், தற்போது பாஜகவில் நாளை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக கடந்த இரண்டு மாதங்களாகவே தகவல்கள் வருகின்றன. புதியக் கல்விக் கொள்கையை ஆதரித்து பேசியதிலிருந்து அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது. தமிழக காங்கிரஸ் குஷ்புவைப் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர்.சி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாஜகவுக்கு நடிகை குஷ்பு வர வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக துணை தலைவருமான அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ நடிகை குஷ்பு பாஜகவின் இணைகிறாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், குஷ்பு பாஜகவில் சேர்ந்தால், அதை வரவேற்பேன். குஷ்பு பாஜகவில் சேர்ந்தால், பாஜக மேல் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதையும் தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்பதையும் காட்டும். மேலும் குஷ்பு தைரியமான பெண்மணி. அவருடைய தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடியவை. 

பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் அரசியலில் தேவை. அது குஷ்புவிடம் நிறையவே இருக்கிறது. எந்த அரசியல் கருத்தைச் சொன்னாலும் புரிதலோடு தெளிவாகப் பேசக்கூடியவர். குஷ்பு பாஜகவுக்கு வந்தால் பிரதமர் மோடியின் சாதனைகளை எடுத்து மக்களுக்கு சொல்வர். எனவே, குஷ்பு பாஜகவுக்கு கட்டாயம் வரவேண்டும்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகனும் குஷ்பூவை பாஜக கட்சிக்கு வரவேற்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை தொடர்ந்து, இது வதந்தி என மறுப்பு தெரிவித்து வந்த குஷ்பு நாளை பாஜக கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.